

சென்னை:“மதுரையில் சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி செய்யும்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர். பி.உதயகுமார், “மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் மதுரை மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை வைத்திருப்பதாகவும், அந்த கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே சித்திரைத் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய முடியும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இத்தகவல் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கு தெரியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். எதையும் எதிர்பார்க்காமல் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகையும் மாநகராட்சி செய்து கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தி இருக்கிறேன். பணம் ஒரு பொருட்டில்லை. விழாவுக்கான முழு ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி நிர்வாகமே செய்யும்” என்றார்.