Published : 23 Apr 2025 03:53 PM
Last Updated : 23 Apr 2025 03:53 PM
மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகளில் சேரும் குப்பைகளை எளிதில் அகற்றிட மாநகராட்சி ஆணையர் முயற்சியால் வைக்கப்பட்டுள்ள ‘பசுமை மாறா மூங்கில் குப்பைக்கூடைகள்’, பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அழகர் கோயில் சித்திரைத் திருவிழாவும், இக்கோயில் விழாவுடன் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த திருவிழா நாட்களில் பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேர்த்திருவிழா மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. சாதாரண நாட்களில் ஒரு நாளைக்கு மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி, தினமும் 20 டன் குப்பைகள் சேரும்.
தற்போது திருவிழா நேரம் என்பதால், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் 30 டன் வரை குப்பைகள் சேகருகின்றன. இந்த குப்பைகளை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள நான்கு சித்தரை வீதிகளில் சேரும் குப்பைகளை எளிதில் அகற்றிட மாநகராட்சி ஆணையர் சித்ராவின் முயற்சியால் ‘பசுமை மாறா மூங்கில் குப்பைக்கூடைகள்’ வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அதிகாரிகள் கூறுகையில், “கோயிலுக்கு வருகிறவர்கள் ஒரே இடத்தில் நிற்பதில்லை. அவர்கள் சித்திரை வீதிகள், மாசி வீதிகள் என இடம்பெயர்ந்து கொண்டே இருப்பார்கள். அப்படி அவர்கள் வரும்போதும், திரும்பி செல்லும்போதும் கைகளில் குடிநீர், குளிபான பாட்டில்கள், சாப்பாடு பார்சல், பூக்கள், பிரசாதம் மற்றும் பல்வேறு பொருட்களை கொண்டு வருகிறார்கள். அவற்றை பயன்படுத்திவிட்டு கடந்த காலத்தில் கோயிலைச் சுற்றி சித்திரை, மாசி வீதிகளில் வீசி செல்கிறார்கள்.
அந்த குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு தூய்மைப் பணியாளர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். வீதிகளில் சிதறி கிடக்கும் இந்த குப்பைகளை எடுக்கும் வரை குப்பைகளாக காணப்படுகின்றன. அதனால், எப்போதுமே தூய்மைப் பணியாளர்கள் வேலை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதாக உள்ளது. இந்த சிரமத்தை போக்கவும், சுற்றுலா பயணிகள், பக்தர்கள், குப்பைகளை கீழே வீசாமல் இருக்கவும் முதற்கட்டமாக கோயிலைச் சுற்றி சித்திரை வீதிகளில் இந்த பசுமை மாறா மூங்கில் குப்பை கூடைகள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாசி வீதிகளிலும் வைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
கைளில் குப்பைகளை கொண்டு வரும் பக்தர்கள், 8 அடிக்கு ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த குப்பை கூடைகளை பார்த்ததும் குப்பையை கீழ போட அவர்களுக்கு மனசு வராது. அவர்களும் குப்பைகளை போட ரொம்ப தூரம் போக வேண்டிய அவசியம் இல்லை.
மாநகராட்சி ஆணையரின் இந்த திட்டத்தால் தற்போது சித்திரை வீதிகள் சுத்தமாக காணப்படுகின்றன. அதுபோல், ஒவ்வொரு கோபுரம் அருகேயும் பச்சை பெட்டிகள் வைத்துள்ளோம். அதில் பிளாஸ்டிக் மற்றும் சில மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை போடலாம். இந்த குப்பைக் கூடைகளில் சேரும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரிப்பதற்கு மிக எளிமையாகவும் உள்ளது.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT