Published : 23 Apr 2025 06:20 AM
Last Updated : 23 Apr 2025 06:20 AM

கடுமை​யாக தேர்​தல் பணி​யாற்ற வேண்​டும்: மாவட்ட செயலா​ளர்​களுக்கு திரு​மாவளவன் அறி​வுறுத்​தல்

சென்னை: மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கடுமையாக தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மறுசீரமைப்பு கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடந்த கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகள், புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து ஆளுநர் ஆர்.என்.ரவியை, குடியரசு உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். தீர்ப்பை மதிக்காமல் துணைவேந்தர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளஆர்.என்.ரவி மீதும், நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகளை அகற்றுவதற்கான பரிந்துரைகளை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் ஒரு நபர் ஆணையம் தமிழக அரசிடம் வழங்கி ஓராண்டு ஆகிறது.

இனியும் காலம் தாழ்த்தாமல் ரோகித் வெமுலா சட்டத்தைத் அரசு இயற்ற வேண்டும். அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் திருச்சியில் மே 31-ம் தேதி பேரணி நடத்தப்படும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விசிக நிர்வாகிகளிடம் கேட்ட போது, “சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் தேர்தலில் கவனம் செலுத்துவது அவசியம்.மாவட்ட செயலாளர்கள் நியமத்தை தள்ளி வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கிராமம் தோறும் சென்று முகாம் அமைக்க வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேச வேண்டும். ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களை மட்டுமே நாம் சந்தித்து பேசக்கூடாது என திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். மே 15-ம் தேதிக்குள் மாவட்ட செயலாளர்கள் முழுமையாக நியமிக்கப்பட்டு விடுவார்கள். மாவட்ட செயலாளர்கள், மேலிட பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கடுமையான தேர்தல் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x