Published : 23 Apr 2025 06:08 AM
Last Updated : 23 Apr 2025 06:08 AM
சென்னை: திமுகவின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். திராவிட அறநெறியாளர் தமிழ்வேள் பி.டி.ராஜன் குறித்த `வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், நூலை வெளியிட்டு பேசியதாவது:‘வாழ்வே வரலாறு’ என்ற நூலை நீதிக்கட்சியின் வழித்தடத்தில் உருவான திமுக தலைவராக இருந்து வெளியிடுவதை என் வாழ்நாளில் கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
1936-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த பி.டி.ராஜனின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழகத்தின் முதல்வர் என்ற தகுதியோடு, அந்த பெருமையோடு வெளியிடுகிறேன். ‘பி.டி.ராஜனின் அரிய ஆலோசனைகளை நிறைவேற்றி வைக்கும் செயல் வடிவமாகத்தான் திமுக ஆட்சி திகழ்கிறது’ என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னார். அந்த வழித்தடத்தில்தான் நாமும் இன்றைக்கு பயணித்துக் கொண்டிருக்கிறோம். நான் அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன். திமுகவின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான்.
இன்றைக்கு எப்படி திராவிடத்தை ஒழிப்போம் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதே மாதிரி, பி.டி.ராஜன் காலத்திலும், “நீதிக்கட்சியை குழி தோண்டி பாதாளத்தில் புதைத்துவிடுவேன்” என்று ஒரு தலைவர் சொன்னார். ஆனால், பி.டி.ராஜனோடு தொடர்ச்சியாக, பண்பாளர் பழனிவேல் ராஜன் வந்தார். இப்போது, பழனிவேல் தியாகராஜனும் நம்முடன் இருக்கிறார்.
நம்முடைய பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரை, அறிவார்ந்த, வலிமையான வாதங்களை வைக்கக் கூடியவர். நான் அவருக்கு கூற விரும்புவது, இந்த சொல்லாற்றல் அவருக்கு பலமாகதான் இருக்க வேண்டுமே தவிர, அவரின் பலவீனமாக ஆகிவிடக்கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்பது அவருக்கே தெரியும். நம்முடைய எதிரிகள், வெறும் வாயையே மெல்லக் கூடிய வினோத ஆற்றல் பெற்றவர்கள்.
அவர்களின் அவதூறுகளுக்கு உங்களின் சொல் அவலாக ஆகிவிடக் கூடாது என்பதை கட்சித் தலைவராக மட்டுமல்ல, உங்கள் மீது அக்கறை கொண்டவனாகவும், அறிவுரை வழங்க கடமைப்பட்டிருக்கிறேன். நம்முடைய எதிரிகளின் முகங்கள்தான் மாறியிருக்கிறதே தவிர, அவர்கள் உள்ளமும், எண்ணமும் இன்னும் மாறவில்லை. அது மாறும் வரை நம்முடைய போராட்டம் ஓயாது தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம், ‘இந்து’ என்.ராம், டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசன், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் உட்பட பலர் பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT