

மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வதால், டாஸ்மாக் கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடைபெறுவதாக எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் நேற்று வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது:
அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுக்கடைகள் மற்றும் மது ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியாகின. அதில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதற்கு முதல்வரோ, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரோ எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ரூ.1,000 கோடி முறைகேடுகள் நடந்திருப்பதாக சொல்லப்படுவது நிரூபணமாகிறது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு உட்பட்ட மதுக்கடைகளில் ஒரு நாளைக்கு 1.5 கோடி பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கி கொண்டுதான் விற்பனை செய்திருந்தார்கள். அந்தவகையில் ஒரு நாளைக்கு ரூ.15 கோடி அளவுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் ஊழல் நடந்திருக்கிறது. அதன்படி 30 நாட்களுக்கு ரூ.450 கோடி, ஓராண்டுக்கு ரூ.5,400 கோடி அளவுக்கு ஊழல் செய்திருப்பது தெரியவருகிறது. டாஸ்மாக் ஊழியர்களே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதை அரசின் கவனத்துக்கு கொண்டுவர வாய்ப்பு கேட்டோம். ஆனால் பேச அனுமதி தர மாட்டோம் என சட்டப்பேரவைத் தலைவர் சொல்லிவிட்டார். இந்த விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் நடந்துகொண்ட விதம் ஜனநாயகப் படுகொலையாகும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருவாரமாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் தூக்கம் இழந்து, காலையில் வேலைக்கு செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில், “மாதம் ஒரு முறை மின் உபயோக கணக்கீடு செய்யப்படும்.” என்று அறிவித்தனர். ஆனால் இதுவரை அதை செய்யவில்லை. இதையொட்டியே கோடைகால மின்தேவை குறித்து அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் பேசினார். ஆனால் அவருக்கு குறைவான நேரமே ஒதுக்கப்பட்டது. மேலும், அவர் பேசும்போது அவரது மைக்கின் சப்தத்தை திட்டமிட்டு குறைத்துவிட்டனர்.
ஜனநாயக ரீதியில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு அளித்தால்தான் பிரச்சினைகள் தீர வழி கிடைக்கும். திமுக அமலாக்கத் துறையை கண்டு நடுங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் பதில் சொல்ல முடியாமல், எங்களையும் பேச அனுமதிக்க மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.