கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது - பின்னணி என்ன?

கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் கைது - பின்னணி என்ன?
Updated on
2 min read

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 5,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலத்தைப்போல தமிழகத்திலும் உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து 100 நாட்கள் வேலை வழங்குவதுடன், 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழிலகத்தில் இருந்து கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சங்கத்தின் மாநிலத் தலைவர் வில்சன், மாநில பொதுச்செயலாளர் ஜான்சி ராணி, பொருளாளர் சக்ரவர்த்தி, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடை அகில இந்திய செயல் தலைவர் நம்புராஜன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் சென்னை எழிலகம் பகுதிக்கு வந்திருந்தனர். இவர்கள் காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகிலிருந்து கோட்டையை நோக்கி செல்ல முயன்றபோது, போலீஸார் கைது செய்து மயிலாப்பூர் லாயிட்ஸ் சாலையில் உள்ள திருமண மஹாலுக்கு அழைத்து சென்றனர்.

முன்னதாக, போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளை போலீஸார் திங்கள்கிழமை இரவு முதல், வீட்டு காவலில் வைக்கத் தொடங்கினர். அதையும் மீறி சென்னைக்கு வந்த மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளி உறுப்பினர்களை சென்னை கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் போலீஸார் கைது செய்தனர். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு நேற்று காலை வந்த 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளையும், தாம்பரம், பெருங்களத்தூர், திருவல்லிக்கேணி உள்பட பல இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளையும் தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர். இதனால், மாற்றுத்திறனாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் வில்சன் கூறுகையில், "சுமார் 20 ஆயிரம் பேர் போராட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர். இதற்காக, சென்னைக்கு வர தயாரானபோது, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். 17 மாவட்டங்களில் சங்க நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளனர். அதையும் மீறி சென்னைக்கு வந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அறவழிப் போராட்டத்தில் ஈடுபட வந்த மாற்றுத்திறனாளிகளை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்றார்.

இதற்கிடையில், பல்வேறு இடங்களில் கைது செய்து, திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

டிடிவி தினகரன் கண்டனம்: இதுதொடர்பாக அமமுக கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை: நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தி சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தங்களின் வாழ்வாதார பிரச்னைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in