யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தருமபுரி மாணவர் தமிழக அளவில் முதலிடம்

யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் தருமபுரியைச் சேர்ந்த மாணவர் சிவசந்திரன் முதலிடம் பிடித்துள்ளார்
யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் தருமபுரியைச் சேர்ந்த மாணவர் சிவசந்திரன் முதலிடம் பிடித்துள்ளார்
Updated on
2 min read

சென்னை: ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கான தேர்வில் தேசிய அளவில் 1009 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக அளவில் தருமபுரியைச் சேர்ந்த சிவசந்திரன் என்ற பட்டதாரி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

நம்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

அதன்படி 2024-ம் ஆண்டில் 1,056 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 16-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 5 லட்சத்து 83,213 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவுகள் ஜூலை 1-ம் தேதி வெளியிடப்பட்டன. அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு 14,627 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு செப்டம்பர் 20, 21, 22 மற்றும் 28, 29 ஆகிய 5 நாட்கள் சென்னை உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் டிசம்பர் 9-ம் தேதி வெளியாயின. இதில் 2,845 பேர் வரை தேர்ச்சி பெற்றனர்.

இதையடுத்து முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நேர்காணல் தேர்வு ஜனவரி 7 முதல் ஏப்ரல் 17-ம் தேதி வரை டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில் முதன்மைத் தேர்வு, நேர்காணல் தேர்வு ஆகியவற்றின் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு 1,009 பேர் தேர்வாகியுள்ளனர். இதன் பட்டியலை யுபிஎஸ்சி தனது இணையதளத்தில் (www.upsc.gov.in) வெளியிட்டுள்ளது. அதன்படி, தேசியளவில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சக்தி துபே முதலிடத்தை பெற்றுள்ளார்.

50 பேர் தேர்ச்சி: தமிழகத்தை பொருத்தமட்டில் மொத்தம் 50 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தருமபுரியைச் சேர்ந்த பி.சிவச்சந்திரன் என்பவர் மாநில அளவில் முதலிடமும், தேசியளவில் 23-ம் இடத்தையும் பிடித்துள்ளார். இவர் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவராவார்.

அதேபோல், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீஜீ என்ற மாணவி மாநில அளவில் 2-ம் இடமும், தேசியளவில் 25-வது இடத்தையும் பிடித்துள்ளார். ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கிடையே ஒட்டுமொத்தமாக 180 பேர் ஐஏஎஸ் பதவிக்கும், 37 பேர் ஐஎஃப்எஸ் பதவிக்கும், 200 பேர் ஐபிஎஸ் பதவிக்கும், 613 பேர் குருப் ‘ஏ’ பதவிகளுக்கும், 113 பேர் குருப் ‘பி’ பதவிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களில், தேர்ச்சி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் யுபிஎஸ்சி வலைத்தளத்தில் வெளியிடப்படும். இதில் தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in