Published : 22 Apr 2025 04:45 PM
Last Updated : 22 Apr 2025 04:45 PM
சென்னை: “பென்னாகரத்தில் புளியை பதப்படுத்த 10 தொழில்முனைவோருக்கு ரூ.2.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக” சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி பேசும்போது, “பென்னாகரம் தொகுதியில் புளி ஏராளமாக சாகுபடி செய்யப்படுவதால் அதனை பதப்படுத்த அரசு மானியத்துடன் கடன் வழங்குமா? இப்பகுதியில் விளையும் புளிக்கு அரசு புவிசார் குறியீடு பெற்று தருமா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதிலளித்து பேசியதாவது: “தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியில் 445 ஏக்கர் பரப்பளவில் புளி சாகுபடி செய்யப்பட்டு, 2500 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. புளிய மரத்தில் இருந்து பெறப்படும் புளியிலிருந்து ஓடு, நார், புளியங்கொட்டை ஆகியவற்றை நீக்கி, அதை பதப்படுத்தி பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த தொழிலில் சுமார் 500 குடும்பங்கள் சிறிய அளவில் ஈடுபட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் புளி பதப்படுத்தும் தொழில் செய்வதற்கு 10 தொழில்முனைவோருக்கு ரூ.34 லட்சம் மானியத்துடன் ரூ.2.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. புளி பதப்படுத்தும் தொழில் செய்ய முன்வரும் தொழில்முனைவோருக்கு துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் 5 சுய வேலைவாய்ப்பு திட்டங்களில் கீழ் மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது. புவிசார் குறியீடானது வேளாண் பொருள்கள், உணவு பொருள்கள், கைவினை பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்திய அளவில் 69 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் அறிவுசார் சொத்துரிமையை பாதுகாத்து தமிழகத்தின் பெருமைய உலகுக்கு உணர்த்த, கடந்த வாரம் புவிசார் குறியீடு பெற வழங்கப்படும் மானியத்தை முதல்வர் ஸ்டாலின் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெற வேண்டும் என்றால், அப்பொருள் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். அதற்கான வரலாற்று சான்றும் இருக்க வேண்டும்.
அப்பொருளுக்கும் அப்பகுதிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உள்ள தொடர்பு உறுதிபடுத்தப்பட வேண்டும். அதற்குரிய ஆவணங்களை தேடி பெற்று, புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் பதில் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT