Published : 14 Jul 2018 07:59 PM
Last Updated : 14 Jul 2018 07:59 PM

நடிகை ஸ்ரீ ரெட்டி புகாருக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டும்: டி.ராஜேந்தர் பேட்டி

 சில நடிகர்கள், இயக்குநர்கள் மீது நடிகை ஸ்ரீரெட்டி கொடுத்த புகார் மீது சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டும் என இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

“திரைப்படத்தில் புகை பிடிப்பது பற்றி பிரச்சினை வந்தது. வெளிப்படையாக நான் கருத்து சொன்னேன். சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக நான் வாதாடுவேன் என்று சொன்ன பிறகு ஒருவரும் வாய் திறக்கவில்லை. சிலர் இப்போது வாய் திறக்கிறார்கள்.

காரணம் நமக்கேன் வம்பு என்ற எண்ணம். சினிமாவிலேயே உங்கள் உரிமைக்கு குரல் கொடுக்காதவர்கள் நாளை மக்களுக்காக எப்படி போராடப் போகிறீர்கள்.

தற்போது தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள் சிலர் மீதும், இயக்குநர் மீதும் புகார் கூறி உள்ளார். 1979-ல் சினிமாவில் நுழைந்தவன், கதாநாயகியை தொட்டுக்கூட நடித்தவன் இல்லை நான், தனிமனித ஒழுக்கத்தோடு வாழ்ந்துள்ளேன், என் மீது எந்த கிசுகிசுவும் கிடையாது. சினிமாவில் நல்லவர்களும்  இருக்கிறார்கள். சில பேர் இப்படியெல்லாம் இருக்கிறார்கள்.

வசந்த மாளிகையில் சிவாஜி கணேசன் ஒரு வசனம் சொல்வார் அது போன்று, சினிமா உலகத்தில் இருக்கக்கூடிய அடுத்த தலைமுறை நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இது போன்ற குற்றச்சாட்டு வரும்போது தங்களைத் தாங்களே சரி செய்துகொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

சினிமாவில் நல்லதும் இருக்கும். கெடுதலும் இருக்கும். சமுதாயத்திலும் அப்படி உண்டு, ஏன் மகாபாரதத்திலும் அப்படி இருந்துள்ளது. சகுனி என்ற பாத்திரம் இருந்தது போல் கிருஷ்ணன் என்ற நல்ல பாத்திரமும் உண்டு. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு நான் என்ன பதில் சொல்வது?

குற்றம் சாட்டுவது நடிகையின் உரிமை, சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு பதில் சொல்லச் சொல்லுங்கள். அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.''

இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x