3 கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் பதவி நீக்கத்தை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு

3 கவுன்சிலர்கள், நகராட்சி தலைவர் பதவி நீக்கத்தை எதிர்த்த வழக்கு தள்ளிவைப்பு

Published on

சென்னை: சென்னை, தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவரின் பதவி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணயை உயர் நீதிமன்றம் நாளை மறுதினத்துக்கு (ஏப்.24) தள்ளிவைத்துள்ளது.

சென்னை மாநகராட்சி 189-வது வார்டு கவுன்சிலர் பாபு, 5-வது வார்டு கவுன்சிலர் கே.பி.சொக்கலி்ங்கம், தாம்பரம் மாநகராட்சி 40-வது வார்டு கவுன்சிலரும், மண்டலத் தலைவருமான ஜெயபிரதீப் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவரும், 11-வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறி 4 பேரையும் பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கடந்த மார்ச் 27-ல் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கவுன்சிலர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ராகசந்தோஷ், செல்வம், மோகன் ஆகியோர், 4 பேரையும் பதவி நீக்கம் செய்தது செல்லாது என்றும், சட்டவிரோதம் என்றும் வாதிட்டனர்.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் எம்.சுரேஷ்குமார் ஆஜராகி, ‘இந்த வழக்கு விசாரணையை கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும்’ எனக் கோரினார். அதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை நாளை மறுதினத்துக்கு (ஏப்.24) தள்ளிவைத்து, அன்றைய தினம் தமிழக அரசு தரப்பில் கண்டிப்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in