ஆளுநர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா? - உயர்கல்வி துறை வட்டாரத்தில் சலசலப்பு

ஆளுநர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா? - உயர்கல்வி துறை வட்டாரத்தில் சலசலப்பு
Updated on
1 min read

சென்னை: ஊட்டியில் ஏப்ரல் 25, 26-ம் தேதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா, இல்லையா என்ற கேள்வியால் உயர்கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்நிலையில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு பதிலாக மாநில அரசுக்கு வழங்குவது உட்பட 10 சட்ட மசோதாக்களை சட்டப்பேரவையில் இருமுறை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டும் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கில் நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே தனக்குரிய சிறப்பு அதிகாரத்தின் மூலம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, தமிழக அரசின் 10 சட்டங்களும் அரசிதழில் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்.16-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்தது.

வழக்கமாக, பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி ஆண்டுதோறும் துணைவேந்தர்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்துவார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக முதல்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தியது உயர்கல்வி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், ஊட்டியில் ஏப். 25 மற்றும் 26-ம் தேதி துணைவேந்தர்களின் ஆலோசனைக் கூட்டத்தை ஆளுநர் ஆர்.என். ரவி கூட்ட இருப்பதாகவும், அதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுதொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தற்போது பல்கலைக்கழக வேந்தரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் குறைத்த நிலையில், ஏற்கெனவே துணைவேந்தர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் நடத்தியதாலும் இந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளது. தமிழ்நாடு பல்கலைக்கழக திருத்தங்கள் சட்ட மசோதாக்கள் உச்ச நீதிமன்ற சிறப்பு அதிகாரம் காரணமாக சட்டமாகி நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால், பல்கலைக்கழகங்களின் வேந்தராக (தமிழ்நாடு இசை பல்கலைக்கழகம் நீங்கலாக) ஆளுநரே இருந்து வருகிறார்.

வேந்தர் என்ற முறையில் பல்கலைக்கழக நிர்வாகத்தை அவர் ஆய்வு செய்ய அவருக்கு அதிகாரம் இருக்கிறது. இருப்பினும் உச்ச நீதிமன்ற உத்தரவால் அனைத்து பல்கலைக்கழக நிர்வாகங்களின் அதிகாரமும் தமிழக அரசு வசம் வந்துவிட்டதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஆளுநர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் துணைவேந்தர்கள் பங்கேற்பார்களா, இல்லையா என்ற கேள்வி உயர்கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in