Published : 22 Apr 2025 04:44 AM
Last Updated : 22 Apr 2025 04:44 AM

புதிதாக 642 துணை சுகாதார நிலையங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசும்போது வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:

விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 13 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 500 முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்கள் உருவாக்கப்படும். முதல்முறையாக கிராமங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் பங்களிப்புடன் டயாலிசிஸ் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்படும்.

எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ தேவை மற்றும் ஊட்டச்சத்துக்காக மாதம்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். எடை குறைந்த குழந்தைகளுக்கு ரூ.8 கோடி மதிப்பீட்டில் இரும்புச்சத்து சொட்டு மருந்து, வைட்டமின் டி3, மல்டி வைட்டமின் சொட்டு மருந்துகள் அடங்கிய ‘முதல்வரின் சிசு பாதுகாப்பு பெட்டகம்’ வழங்கப்படும்.

10 ஆயிரம் மக்கள்தொகைக்கு அதிகமாக உள்ள பகுதிகளில் தேவைக்கேற்ப 642 நகர மற்றும் கிராம துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும். உடல் உறுப்பு தானம் செய்வோரை பாராட்டும் வகையில் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ‘கவுரவ சுவர்’ நிறுவப்படும்.

ஏழைகளுக்கு உயர்தர புற்றுநோய் சிகிச்சையளிக்கும் வகையில் ராமநாதபுரம், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ரூ.54 கோடி செலவில் சிடி சிமுலேட்டர் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும்.

மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, தருமபுரி, தூத்துக்குடி ஆகிய 5 அரசு மருத்துவக்கல்லூரிகளில் ரூ.42.5 கோடி செலவில் புதிய அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவிகள் வழங்கப்படும். கோவையில் ரூ.29.67 கோடி செலவில் மருத்துவ சாதனங்கள் சோதனைக்கூடம் நிறுவப்படும்.

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கேத்லேப் வசதி (உள்ளூடுருவி கதிரியக்க ஆய்வகங்கள்) ஏற்படுத்தப்படும்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி, மதுரை, செங்கல்பட்டு, சிவகங்கை, திருவள்ளூர் ஆகிய 6 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் ரூ.25 கோடி செலவில் சிடி ஸ்கேன் வசதி அமைக்கப்படும்.

சென்னை ஸ்டான்லி, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்கள் நிறுவப்படும். வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.13.28 கோடி செலவில் ஹார்மோன் ஊசிகள் வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் ரூ.7 கோடியில் புதிதாக 100 யோகா மற்றும் இயற்கை மருத்துவ நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்படும்.

முழு பல் நல பரிசோதனை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முழுநேர ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உதவித் தொகை வழங்க ஆண்டுதோறும் ரூ.2 கோடி ஒதுக்கப்படும். சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முழுமையான பல் நல பரிசோதனை (மாஸ்டர் டென்டல் ஹெல்த் செக்-அப்) பிரிவு தொடங்கப்படும் என்பன உட்பட 118 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

மேலும் அமைச்சர் பேசும்போது, "கடந்த ஆண்டு 463 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் 90 சதவீத அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x