Published : 21 Apr 2025 04:13 PM
Last Updated : 21 Apr 2025 04:13 PM
சென்னை: கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவுக்கு வைகோ, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வைகோ: உலகெங்கிலும் வாழ்கிற கோடான கோடி கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைவரான போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் இன்று மறைந்தார் என்ற செய்தி மிகப்பெரும் துக்கத்தைத் தருகிறது. 12 ஆண்டுகள் வாட்டிகன் திருச்சபைக்குத் தலைவராக இருந்த போப்பரசர், உலகில் சாதி மதங்களால் எந்த இரத்தக்களறியும் ஏற்படக்கூடாது என்றும், சமாதானம் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அருள்மொழி வழங்கிய போப்பரசரின் மறைவு அனைத்து தரப்பினரையும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது. நேற்று ஈஸ்டர் தின கொண்டாட்டத்தில் பங்கேற்று மக்களுக்கெல்லாம் அருள்மொழி தந்து ஆசி வழங்கிவிட்டு இன்று திருச்சபையின் இல்லத்திலேயே மறைந்துவிட்டார்.
செல்வப்பெருந்தகை: ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தோம். அவரது முழு வாழ்க்கையும் இறைவனுக்கும், அவரது திருச்சபைக்கும் சேவை செய்வதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டது. முற்போக்கான கருத்துகள் கொண்டவராகவும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு அளிப்பவராகவும் அறியப்பட்டவர். கத்தோலிக்க மதத்தில் பல்வேறு சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் திருச்சபைக்கு உள்ளேயும், வெளியேயும் கொண்டு வந்தவர்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக தனது போப் ஆண்டவர் பதவியில் இருந்த காலத்தில் மதங்களுகிடையேயான உரையாடலை ஆதரித்ததோடு, மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர். மதரீதியான கசப்புகளையும், வெறுப்புகளையும் ஏற்றுக் கொள்ள மறுத்தவர். அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் உரிமைகளுக்காக வாதாடியவர். அவரது மறைவினால் வருத்தத்துக்கு உள்ளாகி இருக்கும் கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமணி ராமதாஸ்: கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த போப் பிரான்சிஸ் தென் அமெரிக்காவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையுடையவர். உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் அக்கறை கொண்ட போப் பிரான்சிஸ், தமது 12 ஆண்டு பதவிக்காலத்தில் உலகில் அமைதியை ஏற்படுத்த ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டவர். ஈஸ்டர் திருநாளையொட்டி, நேற்று செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் மக்களுக்கு ஆசி வழங்கும் போதும் உலகில் போர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்; அமைதி நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று தான் வேண்டினார்.
போப் பிரான்சிஸ் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பாகும். போப் பிரான்சிஸ் அவர்களை இழந்து வாடும் கத்தோலிக்கர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் சோகத்தின் நானும் பங்கு கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன்.
ராமதாஸ்: உலக மக்களிடம் எல்லையில்லாத அன்பும், கருணையும் காட்டிய கத்தோலிக்க மக்களின் சமயத் தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார் என்பதை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை குருவாக 12 ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்றுக் கொண்ட போப் பிரான்சிஸ், கிறித்தவ மக்களையும் கடந்து உலகில் அனைத்துத் தரப்பினராலும் நேசிக்கப்பட்ட மனிதராக திகழ்ந்தார். சமயத்தைக் கடந்து நல்லிணக்கம், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்காகவும் பாடுபட்டவர். உலகில் நலிவடைந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்த அவரது மறைவு உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். கிறித்தவ மக்களின் சோகத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT