

மதுரை: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்ததர்கள் நலனை கருத்தில் கொண்டு, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் தரமானதா? என்பதை ஆய்வு செய்ய குடிநீர் மாதிரிகளை திருநெல்வேலி மண்டல ஆய்வகத்துக்கு, பொது சுகாதார துறை அனுப்பியுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவை முன்னிட்டு திரளும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை மற்றும் சுகாதார வசதிகள், கள்ளழகர் வந்து செல்லும் சாலைகள் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. திருவிழாவுக்கு லட்சக்கணக்கில் பொதுமக்கள் வந்தால் அவர்கள் குடிக்கும் குடிநீர் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த திருவிழாவுக்கு முன்பாக அதன் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவது பொது சுகாதாரத் துறையின் முக்கியமான அடிப்படைப் பணி.
இந்த திருவிழா மாநகராட்சிப் பகுதியில் நடப்பதால் மாநகர நகர் நல அலுவலகம் சார்பில் சித்திரைத் திருவிழா நடக்கும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பொதுமக்கள், பக்தர்கள் குடிப்பதற்காக மாநகராட்சி விநியோகம் செய்யும் குடிநீர் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதற்காக மாநகர நகர் நல அதிகாரிகள், திருவிழா நடக்கும் பகுதிகளில் தற்போது மாநகராட்சி விநியோகிக்கும் குடிநீரின் தரத்தையும், அந்த தண்ணீர் பொதுமக்கள் குடிக்க உகந்ததா? என்பதை ஆய்வு செய்தற்காகவும் அதன் மாதிரிகளை சேகரித்து வருகிறார்கள்.
சேகரிக்கப்பட்ட மாதிரிகளை, திருநெல்வேலியில் உள்ள மண்டல பொது சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பி வருகிறார்கள். இந்த குடிநீர் குடிக்க உகந்த சுகாதாரமான குடிநீராக இருக்கும்பட்சத்தில் மாநகராட்சி தற்போது விநியோகிக்கும் குடிநீரே, சித்திரைத் திருவிழா நடக்கும் பகுதிகளில் வழக்கம்போல் விநியோகம் செய்யப்படும். அதில், ஏதாவது குறைபாடுகள் தெரிய வந்தால் அதை போக்குவதற்கு திருவிழா தொடங்குவதற்குள் மாதிரி எடுத்தப் பகுதிகளில் பாதுகாப்பான குடிநீரை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கும்.
இதுகுறித்து மாநகராட்சி நகர் நல அதிகாரிகள் கூறுகையில், “தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, கோவை உள்பட 4 இடங்களில் மண்டல பொது சுகாதார ஆய்வகங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் முக்கிய திருவிழா நடக்கும் இடங்களில் அந்த திருவிழாவுக்கு முன்பு இதுபோல் குடிநீர் மாதிரியை எடுத்து அனுப்பி பரிசோதனை செய்வது வழக்கமான நடைமுறைதான். அவ்வாறு செய்ய தவறும்பட்சத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து அதனை பருகுவோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான், சித்திரைத் திருவிழா நடக்கும் பகுதிகளில் குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.” என்றார்.