

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள், மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 44 துறைகள் உள்ளன. மொத்தம் 3,800 படுக்கை வசதிகள் இருக்கின்றன. தினமும் 12 ஆயிரம் புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
தினமும் சுமார் 500 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள், தூய்மை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவர்கள் மீது தாக்குதல், நோயாளிகளிடம் திருட்டு போன்ற சம்பவங்களை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, தமிழக அரசு உத்தரவின்படி மருத்துவர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள், மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக அடுக்குமாடி-1, அடுக்குமாடி-2, அடுக்குமாடி-3 மற்றும் சிறப்பு பகுதி தளங்கள், இதய பிரிவு தளம், சிறுநீரக பிரிவு தளம், முடக்குவாத பிரிவுதளம் ஆகிய இடங்களில் 429 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் 12 கண்காணிப்பு அறைகள் மூலம் பிரத்யேகமாக 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையும், மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து ஆய்வு செய்து கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட வேண்டிய இடத்தை தேர்வு செய்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று மருத்துவமனை டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.