

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் 19.66 ஏக்கர் பரப்பளவு நிலம், தமிழக அரசு சார்பில் 1969-ம் ஆண்டு, வருவாய் வாரிய கூட்டுறவு வீட்டு மனை சங்கம், மண்டல கணக்காயர் அலுவலக வீட்டுமனை சங்கம், தலைமை செயலகத்தில் பணிபுரியும் கடை நிலை ஊழியர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 300 பேருக்கு வழங்கப்பட்டது.
பெருங்களத்தூர் பெரிய ஏரி பகுதி என்பதால் கிராம நத்தம் பிரிவில் குடியிருப்பு நிலமாக மாற்றி அனைவருக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் அனைவரும் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். ஆனால், யாருக்கும் பட்டா வழங்கப்படவில்லை.
இதனிடையே 2006-11 திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கிராம நத்தம் பகுதியில் வசிப்பவர்களுக்கு அவர்களின் பெயர்களிலேயே பட்டா வழங்க வேண்டும் என அரசு ஆணை வெளியிடப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அரசு ஊழியர்கள் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்தனர். ஆனால் பட்டா வழங்க மறுத்த தாம்பரம் வருவாய் துறையினர், எப்.எம்.பி. வரைபடத்தில் தவறு இருப்பதாகவும் எனவே பட்டா வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர். அதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு குடியிருப்போர் சார்பில் நில நிர்வாகத்துறைக்கு முறைப்படி மனு அனுப்பிவைத்து, பின்னர் எப்.எம்.பி. வரைபடத்தில் சரி செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் பட்டா கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து பட்டா வழங்காமல் காலதாமதமாகி வருகிறது. இதனிடையே குடியிருப்போர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அவரது முயற்சியின் பேரில் பட்டா வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி வந்தபோது மீண்டும் பணி தொடங்கியது. ஆனால் மெத்தன நடவடிக்கையால் இன்னும் பட்டா பெற முடியாமல் 15 ஆண்டுகளாக அவர்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் நிலத்தை விற்க முடியாமலும், வாங்க முடியாமலும், கடன் பெற முடியாமலும் தவிப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இவர்களுக்கு பட்டா கிடைக்கக் கூடாது என வருவாய் துறை ஊழியர்கள் சிலர் உள்ளூர் அரசியல்வாதிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டு சதி செய்வதாக குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு கொடுத்த நிலத்துக்கே இன்னும் பட்டா பெறாமல் தவித்து வருவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ஜெபதுரை கூறியதாவது: எங்கள் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து மனு அளித்து வந்தோம். அவர்கள் செவிசாய்க்கவில்லை. இதனால் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அதன் பிறகு பணிகள் வேகமாக நடைபெற்றது.
ஆனால், தாம்பரம் வருவாய் துறையில் உள்ள அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால் பட்டா பெற முடியாமல் அரசு ஊழியர்கள் தவித்து வருகின்றனர். கருணாநிதி முதல்வராக இருந்தபோது அரசு ஊழியர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் கிராம நத்தமாக மாற்றம் செய்யப்பட்டு பட்டா வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், அதிகாரிகள் எப்.எம்.பி. வரைபடத்தில் குளறுபடி செய்ததால் பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதனை சரி செய்ய பலமுறை முயன்றும் எங்களால் முடியவில்லை. தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா ஒத்துழைப்பு காரணமாக விரைவாக பணிகள் நடந்து பட்டா வழங்கும் நிலைக்கு தற்போது வந்துள்ளது.
அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்ட பிறகும் பட்டா வழங்குவதை வருவாய்த்துறையினர் இழுத்தடிப்பு செய்கின்றனர். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அதிகாரிகள் செயல்படுகின்றனர். அரசு வழங்கிய 19.66 ஏக்கர் நிலத்தை காட்டிலும் சிலர் கூடுதலாக ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கிராம நத்தம் என கணக்கில் மாற்றம் செய்து மோசடி செய்ததால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். அந்த நபர்கள் தற்போது பட்டா கிடைக்கவிடாமல் இடையூறு செய்கின்றனர். அவர்களுக்கு வருவாய்த்துறையினர் ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.