கோவை: அரசு பேருந்துகளில் அமைக்கப்பட்ட விபத்து தடுப்பு கட்டமைப்புகள் சேதம்; சமூக ஆர்வலர்கள் வேதனை

கோவையில் இயக்கப்படும் அரசு பேருந்தில்  விபத்து தடுப்பு கட்டமைப்பு ஒரு பாதி இல்லாமல் இயக்கப்படும் காட்சி. | படம்: இல.ராஜகோபால்.
கோவையில் இயக்கப்படும் அரசு பேருந்தில்  விபத்து தடுப்பு கட்டமைப்பு ஒரு பாதி இல்லாமல் இயக்கப்படும் காட்சி. | படம்: இல.ராஜகோபால்.
Updated on
1 min read

கோவை: அரசு பேருந்தில் அமைக்கப்பட்ட விபத்து தடுப்பு கட்டமைப்பு பாதி அகற்றப்பட்ட நிலையில் இயக்கப்படுவதால் இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நோக்கம் வீணாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்து ஏற்படும் போது பேருந்து சக்கரங்களுக்கு இடையே உள்ள பகுதியில் மக்கள் விழுவதை தடுக்கும் நோக்கில் பேருந்துகளில் தடுப்பு போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளிலும் இக்கட்டமைப்பு அவசியம் ஏற்படுத்த வேண்டும் என காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு விபத்து தடுப்பு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தாத பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்து வருகின்றனர். இத்திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற நிலையில், திட்டம் அமல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே பாதி கட்டமைப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கப்படும் சம்பவங்கள் காணப்படுகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, ''பேருந்துகளில் அமைக்கப்படும் விபத்து தடுப்பு கட்டமைப்பு உயிரிழப்பு மற்றும் படுகாயம் அடைவதை தடுத்தல் போன்ற பல நன்மைகளை கொண்டுள்ளது. கோவை மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே பேருந்துகளில் இக்கட்டமைப்பு பாதி உடைந்து இயக்கப்படும் காட்சிகள் அரங்கேற தொடங்கியுள்ளன. இது நல்லதல்ல. திட்டம் தொடங்கப்பட்டதன் நோக்கமே வீணாகிறது. அரசு மற்றும் தனியார் பேருந்து நிர்வாகத்தினர் விழிப்புடன் செயல்பட்டு விபத்து தடுப்பு கட்டமைப்புடன் பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in