

சென்னை: 'அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்' என தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈஸ்டர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா என அழைக்கப்படும் ஈஸ்டர் பண்டிகை இன்று (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளப் பக்கத்தில் வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் ஆகியவற்றின் பேருருவமான இயேசு பிரானின் வழியைப் பின்பற்றி நடக்கும் கிறித்தவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துகள்! உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும்! அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.