சென்னையில் தொடங்கியது முதல் ஏசி மின்சார ரயில் சேவை - கட்டண விவரமும், பயணிகள் கோரிக்கையும்

படங்கள்: ம.பிரபு
படங்கள்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னையில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை நேற்று தொடங்கியது. கடற்கரை - செங்கல்பட்டு வரை கட்டணமாக ரூ.105-ம், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை நேற்று காலை தொடங்கியது. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இந்த ரயிலை சீனியர் மோட்டார்மேன் பிச்சாண்டி இயக்கினார். ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில், கடற்கரை - செங்கல்பட்டு இடையே இருமார்க்கமாக தலா 2 சேவைகளும், கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கமாக தலா ஒரு சேவையும் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் பிரதான பாதையில் செல்லும்போது, கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், பரனுார் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

அதிகபட்ச கட்டணம் ரூ.105: கட்டணத்தைப் பொருத்தவரை, கடற்கரையில் இருந்து கோடம்பாக்கம் வரை ரூ.35-ம், மாம்பலம், சைதாப்பேட்டை வரை ரூ.40ம், கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல், மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம் வரை ரூ.60-ம், குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியம், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வரை ரூ.85-ம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி வரை ரூ.90-ம், காட்டாங் கொளத்தூர், மறைமலைநகர் வரை ரூ.95-ம், சிங்கபெருமாள்கோவில் வரை ரூ.100ம், பரனூர், செங்கல்பட்டு வரை ரூ.105 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணமாக கடற்கரை - எழும்பூர் வரை குறைந்தபட்சமாக ரூ.620ம், செங்கல்பட்டு வரை ரூ.2,115ம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மின்சார ரயில் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்த ஏசி மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி கிடையாது. இந்த ரயிலுக்காக தனிப்பட்ட கட்டண அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகள் கோரிக்கை: இதற்கிடையே, குறைந்தபட்ச கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, ரயில் பயணிகள் சிலர் கூறுகையில், "மெட்ரோ ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 இருக்கிறது. அதுபோல, ஏ.சி மின்சார ரயில் கட்டணத்தையும் குறைக்க வேண்டும்" என்றனர்.

சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது இதுதொடர்பாகக் கேட்டபோது, "பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில், சென்னை ரயில்வே கோட்டத்தின் முதல் ரயில். மேலும் நீண்ட தூரம் செல்லும் ரயில் ஆகும். 10 கி.மீ. வரை ரூ.35 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் எத்தனை கி.மீ. வரை ரூ.10 வசூலிக்கப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். கட்டணம் மாற்றம் தொடர்பாக எதுவும் தற்போது கூற முடியாது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in