

திமுக அரசின் நீட் வாக்குறுதியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக மாணவரணி சார்பில், மாவட்ட தலை நகரங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ‘நீட் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவரணி சார்பில் ஏப்.19-ம் தேதி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்’ என்று அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக இளைஞரணி சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில் பங்கேற்ற அதிமுக மாணவரணியினர் கருப்பு சட்டை அணிந்து, மெழுகுவர்த்தி ஏந்தியவாறு, நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தி, திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
சென்னை எழும்பூரில், மாணவரணி மாநிலச் செயலாளர் சிங்கை ஜி.ராமசந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசும்போது, "நீட் தேர்வு ரகசியம் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டுமே தெரியும் என்று மேடை போட்டு முழங்கினார்கள். ஆனால் 4 ஆண்டுகளைக் கடந்த பின்னும் நீட் விலக்கு கொண்டு வரப்படவில்லை. 22 மாணவர்கள் உயிரிழந்ததுதான் இவர்களுக்கு தெரிந்த நீட் ரகசியம். கையெழுத்து இயக்கம், அனைத்துக் கட்சி கூட்டம் போன்ற நாடகங்கள் முடிந்துவிட்டன. ஆட்சி முடியப்போகிறது உதயநிதியும், ஸ்டாலினும் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்" என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆதி ராஜாராம், கே.பி.கந்தன், ஆர்.எஸ்.ராஜேஷ், நா.பால கங்கா, டி.ஜி.வெங்கடேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.