நம்பி நாராயணன் ஆலோசகராக உள்ள நிறுவனத்துக்கும் அரசின் விண்வெளி கொள்கைக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் விளக்கம்

நம்பி நாராயணன் ஆலோசகராக உள்ள நிறுவனத்துக்கும் அரசின் விண்வெளி கொள்கைக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் விளக்கம்
Updated on
1 min read

‘நம்பி நாராயணன் ஆலோசகராக இருக்கும், எந்தவித முதலீடும் செய்யாத அந்த நிறுவனத்துக்கும், தமிழக அரசின் விண்வெளி கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை’ என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், விண்வெளிக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த கொள்கை தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக, தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: எந்தத் துறையாக இருந்தாலும் அதில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் தமிழகத்தின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விண்வெளி தொழில் கொள்கை-2025. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கான திட்டமிடல்களும் தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு ஐஐடி உள்ளிட்ட உயர் நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்புடன் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை ஐஐடியின் புத்தாக்க நிறுவனமான அக்னிகுல் உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய தமிழக நிறுவனங்களுடன் இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனங்களைக் கொண்டு தமிழகத்தில் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கும் மகத்தான முயற்சிக்கான ‘லாஞ்ச் பேடு’ ஆக விண்வெளி தொழில் கொள்கை அமைந்துள்ளது.

ஆனால், தமிழக நலனில் அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள், நம்பி நாராயணன் ஆலோசகராக இருக்கும் ஒரு நிறுவனத்தோடு இணைத்து பேசுவது அற்பமான செயல். எந்தவித முதலீடும் செய்யாத அந்த நிறுவனத்துக்கும் இந்த கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் அவர் செய்த சாதனைகளுக்கு இந்த வீணர்கள் கொடுக்கும் பரிசா இது.

அதேபோல நம்மை பார்த்து காப்பி அடித்து குஜராத் மாநிலம் ஒரு கொள்கையை வெளியிட்டு உள்ளது. அவர்களை விட தமிழக அரசு சிறப்பான ஒரு கொள்கையை தயார் செய்து விட்டதே என்ற வயிற்றெரிச்சல் காரணமாகவா?

தமிழகத்தில் எந்தவொரு நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம், இந்த விண்வெளித் தொழில் கொள்கையை விமர்சித்து கொச்சைப்படுத்துவதாக நினைத்து ஐஐடி வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனங்களின் இளந்தமிழர்கள், வேலை வாய்ப்பு பெறவிருக்கும் மகளிர்-இளையோர் ஆகியோரையும் சேர்த்தே கொச்சைப்படுத்துகிறது.

ராக்கெட் மேலே கிளம்பும்போது, கீழே புகையும் நெருப்பும் வருவதைப் பார்க்கலாம். அதேபோல், அரசியல் எதிரிகள் புகையட்டும். திமுக ஆட்சியில் தமிழகத்தின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in