

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நீட் விவகாரம் தொடர்பாக திமுகவும், அதிமுகவும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டன.
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன்வடிவிற்கான ஒப்புதலை வழங்க மறுத்த மத்திய அரசை கண்டித்து பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல்வகாப் எம்எல்ஏ தலைமை வகித்தார். திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணைமேயர் கே.ராஜு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுபோல் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில், திமுக அரசை கண்டித்து, நீட் ரகசியம் பொய், 22 மாணவ, மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி என்று அதிமுக சார்பில் மெழுகு வர்த்திகளை ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலர் சுதாபரமசிவன், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.