

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான தேர்வு முடிவுகளை விரைந்து அறிவித்து, நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகம், பிரிவு அலுவலகம் என 150-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மோட்டார் வாகன ஆய்வாளர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் பணிகளை கண்காணித்து மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் பெரும்பாலானவற்றை கணினி மயமாக்கிய போதும், அலுவலர்கள் பற்றாக்குறை என்பது தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதையடுத்து போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பட்டதாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
110 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் வெளியிட்டது. இப்பணிக்கு எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு 2 ஆயிரத்து 176 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 785 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
மீதமுள்ளவர்களுக்கு 2018 ஜூன் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. விதிகளின்படி, ஒரு பதவிக்கு இரு விண்ணப்ப தாரர்கள் என்ற அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். ஆனால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்களை அழைக்காமல், 33 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கிறது. இதனால் குறிப்பிட்ட நியமனத்தில் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக தடை நீடிக்கிறது.இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ என்ற பிரத்தியேக புகார் எண் சேவையைத் தொடர்பு கொண்டு தேர்வர்கள் சிலர் கூறியதாவது:
தேர்வில் பங்கேற்று அதிக மதிப்பெண் பெற்ற சிலர், எப்போது முடிவை அறிவித்தாலும் நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். நாங்கள் அறிந்தவரை 50 வயதில் தேர்வெழுதிய சுமார் 10 பேர் இறந்து விட்டனர். மேலும் சிலர் பணியில் சேர முடியாத வயது மூப்பை அடைந்துள்ளனர். 2 முறை நேர்காணலுக்கு அழைத்தும், நாங்கள் தயாராகிய நிலையில் பின்னர் ரத்தானது. எங்கள் நிலையை கருத்தில் கொண்டு, விரைந்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை உயரதிகாரி களிடம் கேட்டபோது, “அலுவலர்களின் பணிச்சுமையை அறிந்ததாலேயே வழக்கை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். 3 தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கின்றனர். கடந்த மாதம் அரசு வழக்கறிஞரோடு சென்று வாதத்தை முன்வைத்து வந்தோம். அடுத்த மாதம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முடிவுகளை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம்" என்றார்.