Published : 19 Apr 2025 01:53 PM
Last Updated : 19 Apr 2025 01:53 PM
சென்னை: “பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்பின் காரணமாக 2014-ல் இருந்து 2025 வரை பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் கடந்த 11 ஆண்டுகளில் ரூபாய் 39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து மத்திய அரசு தனது கஜானாவை நிரப்பியிருக்கிறது. இதைவிட அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 11 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு வரிக்கு மேல் வரி பலமுனைகளில் விதித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மக்களை நேரடியாக பாதிக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு நாள்தோறும் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. எந்த பொருளை வாங்கினாலும் ஜிஎஸ்டி வரியிலிருந்து தப்ப முடியாது. இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோல், டீசல் விலையும் குறைவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நடைமுறையாக இருந்தது.
கச்சா எண்ணெய் 110 டாலராக இருந்த போது மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதற்காக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மானியங்களை வழங்கி சுமையை ஏற்றுக் கொண்டது. ஆனால், மத்திய பாஜக அரசு சமீபத்தில் ஏப்ரல் 8-ம் தேதி பெட்ரோல், டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 2 கலால் வரி விதித்திருக்கிறது. இந்த கலால் வரி உயர்வினால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 11 முதல் 13 வரையிலும், ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 8 முதல் 10 வரையும் விலை உயர்வு ஏற்படும் என்று கூறப்பட்டது.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 19.90 ஆக இருந்து ரூபாய் 21.90 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் ஒரு லிட்டர் டீசல் கலால் வரி ரூபாய் 15.80 இல் இருந்து ரூபாய் 17.80 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, சமையல் எரிவாயு விலையும் சிலிண்டருக்கு ரூபாய் 50 உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விலை உயர்வை நுகர்வோர் மீது திணிக்க மாட்டோம் என்று மத்திய அரசு கூறுகிறது. கலால் வரி உயர்வினால் மத்திய அரசின் வருமானம் பலமடங்கு கூடியிருக்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவி விலகும் போது பெட்ரோல் மீதான கலால் வரி ரூபாய் 9.20 ஆக இருந்தது. டீசல் மீதான கலால் வரி ரூபாய் 3.46 ஆக இருந்தது. ஆனால், இன்றைக்கு கலால் வரி உயர்வு பெட்ரோலுக்கு 357 சதவிகிதமும், டீசலுக்கு 54 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி அரசின் வரி பயங்கரவாதத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. பெட்ரோல், டீசல் வரி உயர்வினால் மக்கள் பயன்பாட்டில் உள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
2014 மே மாதம் கச்சா எண்ணெய் ஒரு பேரல் ரூபாய் 9,265. இன்று ரூபாய் 5596 மட்டுமே. அதாவது, 2014-ம் ஆண்டை கணக்கிடும் போது கச்சா எண்ணெய் விலை 40 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், 2014-ல் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 71.41 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 55.49 ஆகவும் இருந்தது. இன்று அதே பெட்ரோல் விலை ரூபாய் 94.77, ஒரு லிட்டர் டீசல் ரூபாய் 87.67 ஆகவும் உயர்ந்திருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 40 சதவிகிதம் குறைந்திருக்கும் போது பெட்ரோல், டீசல் விலையை குறைத்து சாமானிய மக்கள் பயனடைகிற வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மக்கள் மீது தொடர்ந்து சுமையை ஏற்றி வருகிறது. பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்பின் காரணமாக 2014-ல் இருந்து 2025 வரை பெட்ரோலியப் பொருட்கள் விற்பனை மூலம் கடந்த 11 ஆண்டுகளில் ரூபாய் 39.54 லட்சம் கோடியை வரியாக வசூலித்து மத்திய அரசு தனது கஜானாவை நிரப்பியிருக்கிறது. இதைவிட அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT