தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு

Published on

தமிழகத்தில் இன்று (ஏப். 19) சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 20 முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 22-ம் தேதி வரை சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஏப். 18-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, தக்கலை, அணைகெடங்கு, மாம்பழத்துறையாறு, தேனி மாவட்டம் சோத்துப்பாறை, கோவை மாவட்டம் வால்பாறை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, தேன்கனிக்கோட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகிய இடங்களில் ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in