Published : 19 Apr 2025 05:24 AM
Last Updated : 19 Apr 2025 05:24 AM
சென்னை: சமூக வலைதள கருத்தியல் உரையாடல்களுக்காக நிர்வாகிகளுக்கு பயிற்சியளிக்க, மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை தேர்வு செய்ய விண்ணப்பிக்கும்படி இளைஞரணியினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: கருத்தியல் உரையாடல், ஆக்கப்பூர்வமான விவாதம், அவதூறுகளை முறியடித்தல் என்று அரசியல் செயற்பாடுகள் நிகழும் களமாக சமூக வலைத்தளங்கள் இன்று உருவெடுத்துள்ளன.
அதற்கேற்றாற் போல், இளைஞர் அணியினரும் சமூக வலைதளங்களில் களமாடும் வகையில், நம் நிர்வாகிகளுக்கு சமூக வலைதளப் பயிற்சியளிக்கவும், சமூக வலைதளம் சார்ந்த அவர்களின் பணிகளை ஒருங்கிணைக்கவும் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி தலைமை ஒப்புதலுடன் மாவட்டத்துக்கு ஒருவர் என அனைத்து மாவட்டங்களிலும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இப்பொறுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அல்லது ‘ http://bit.ly/DMKYW_SM’ என்ற இணைப்பில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT