Published : 18 Apr 2025 06:35 AM
Last Updated : 18 Apr 2025 06:35 AM
சென்னை: கூட்டணி அமைப்பதில் அதிமுகவுக்கு இவ்வளவு அவசரம் ஏன்? என கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் கொமதேக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், துணை பொதுச்செயலாளர்கள் நித்யானந்தன், ஏ.கே.பி.சின்ராஜ், வி.மாதேஸ்வரன் எம்.பி., உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், குலதெய்வக் கோயில் செயல்பாடுகளில் அரசின் தலையீடு கூடாது. கள் இறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். பெண்களின் திருமண வயதை 21-ஆக அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். 2021-ல் அதிமுகவில் பிளவு இல்லை. தற்போது அங்கு உட்கட்சி பிரச்சினை இருக்கிறது. அதிமுகவில் புதுப்புது தலைவர்கள் உருவாகியுள்ளனர். அவர்களை டெல்லிக்கு வரவழைத்து தங்களது கட்டுப்பாட்டில் வைக்க பாஜக முயற்சிக்கிறது.
இதனால் முன்பு கூட்டணியில் இருந்தவர்களும் தற்போது கூட்டணிக்கு வர தயங்குகின்றனர். பாஜக - அதிமுக கூட்டணி கருத்து முரண்களோடு அவசரமாக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், கூட்டணி அறிவிப்பின்போது அதிமுக பொதுச்செயலாளர் பேசாதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா சொல்லும்போது, பழனிசாமியால் அதை மறுக்க முடியாமல் போனதற்கு பலவீனம்தான் காரணமாக இருக்க முடியும். அதிமுகவுக்கு ஏன் இவ்வளவு அவசரம் என்று தெரியவில்லை. வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பின்போது, உடல்நலப் பிரச்சினை காரணமாக எங்களது எம்.பி. வாக்களிக்கவில்லை.
கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களைப் பிரித்து மேலும் புதிதாக 4 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைப்போம். மாநிலத் தலைவர்களுக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருப்பதை தேசிய கட்சிகள் விரும்புவதில்லை. தமிழகத்தில் பாஜகவில் அண்மையில் நடந்த மாற்றமும் அதன் அடிப்படையில் இருந்திருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT