தமிழகம் முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம்

தமிழகம் முழுவதும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீர்மானம்

Published on

திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், அனைத்துச் சமுதாயத்திலும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தீவிரவாதத்தை எதிர்க்கிறது. வெறுக்கிறது. தீவிரவாத செயல்களால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை. அதனால், தமிழ்நாடு முழுவதும் வரும் அக்டோபர் முதல் நவம்பர் வரை தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் செய்ய உள்ளோம். பாலஸ்தீனத்தில் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்துவரும் இஸ்ரேலுடனான தூதரக உறவை இந்திய அரசு முறிக்க வேண்டும். இஸ்ரேலைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மான்ம் கொண்டுவர தயங்கும் பாஜக அரசின் செயலைக் கண்டிக்கிறோம். தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ரம்ஜான் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் காலகட்டங்களில் மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.

கல்லூரி மற்றும் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

பிரதமர் மோடியுடன் அரசு விழாக்களில் பங்கேற்கும் முதல்வர்களை இழிவுபடுத்தும் பாஜகவினரின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதில் உச்ச நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்.

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

ஊடகங்கள் முஸ்லிம்கள் மீது விஷமப் பிரச்சாரம் செய்து சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்லாத்தை தழுவிய மக்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜைனுல் ஆபிதீன் “சூனியம், செய்வினை என்பதெல்லாம் பொய். தங்களை சூனியக்காரர்கள் என்று சொல்பவர்கள் சூனியத்தால் ஏதேனும் தீங்கு செய்யமுடியும் என்று நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு அளிக்கிறோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்துள்ளது. செய்வினை செய்வதாகக்கூறி மக்களை அச்சுறுத்தி ஏமாற்றி வரும் சூனியக்கார்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் ஒழிக்கப்படவேண்டியவர்கள்” என்றார்.

கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலர் ஆர்.ரஹமதுல்லா, துணை தலைவர் சையத் இப்ராஹிம், துணை பொதுச் செயலர் முஹம்மது யூசூப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in