Published : 18 Apr 2025 05:42 AM
Last Updated : 18 Apr 2025 05:42 AM
சென்னை: இயல், இசை, நாட்டியம், நாடகம் மற்றும் கிராமியக் கலைகளில் சிறந்த சாதனை படைத்த கலைஞர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கலை பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும். கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் இயல், இசை, நாட்டியம், நாடகம் மற்றும் கிராமியக் கலைகளில் சிறந்த சாதனை படைத்த கலைஞர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்படும். சென்னை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் புதிய இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும்.
இளைஞர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக மதுரை அரசு கவின்கலைக் கல்லூரியில் ரூ.24 லட்சத்தில் நாடகப் பிரிவு தொடங்கப்படும். தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளம் மேம்படுத்தப்படும். மேலும், மாணவர்களின் இசைத் திறனை மேம்படுத்த புதிய செயலி உருவாக்கப்படும்.
சென்னை அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு ஏப்.2026-ம் ஆண்டோடு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அருங்காட்சிய வளாகம் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்படும். இந்த அருங்காட்சியகத்துக்கு வரும் மூத்த பார்வையாளர்கள், சிறுவர்களுக்காக இரண்டு பேட்டரி வாகனங்கள் இயக்கப்படும். திருப்பூர், தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT