Published : 18 Apr 2025 04:44 AM
Last Updated : 18 Apr 2025 04:44 AM

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்க ரூ.12,000 மானியம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் கோயில் அர்ச்சகர்கள் 10 ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு, 210 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: ஆயிரம் இணையர்களுக்கு கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.

ஒருகால பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். ஒருகால பூஜைத் திட்ட அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் கோயில் அர்ச்சகர்கள் 10 ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், பழனி முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், மதுரை மீனாட்சி கோயில், ராமேசுவரம் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயில் மற்றும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும்.

இதுதவிர கோயில்களில் காலியாக உள்ள ஓதுவார் பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கோயில்களில் தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களின் பச்சிளங் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கப்படும். முதல்கட்டமாக திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி, ஆனைமலை மாசாணியம்மன், பண்ணாரி, திருப்பரங்குன்றம், மருதமலை, பெரியபாளையம் பவானியம்மன் கோயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதேபோல், தமிழகத்தில் தற்போது 13 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும்.

இந்தக் கோயில்களில் இனி வடை, பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்படும். மேலும், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சிறப்பு நாள்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படும்.

ஒருவேளை அன்னதானத் திட்டம் தற்போது 764 கோயில்களில் நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு விழுப்புரம் மாவட்டம் குருசாமி அம்மாள் மடம் மற்றும் வள்ளலார் திருக்கோயில், மதுரை மலையாண்டி கருப்பசாமி கோயில், தஞ்சாவூர் நாடியம்மன் கோயில் மற்றும் ரெங்கநாதப்பெருமாள் கோயில், ஈரோடு செண்பகமலை குமாரசாமி கோயில், விழுப்புரம் பூமீசுவரர் கோயில்களில் அது விரிவுபடுத்தப்பட உள்ளது.

கோயில்களில், மணிவிழா கண்ட 70 வயதைக் கடந்த ஆன்மிக ஈடுபாடு கொண்ட மூத்த தம்பதிகள் 2,000 பேருக்கு சிறப்பு செய்யப்படும். வெளிநாடுவாழ் பக்தர்களுக்கு 48 கோயில்களில் 24 மணி நேர உதவி மையம் அமைக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வரும் கோயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச சிறப்பு தரிசனம் வழங்கப்படும். திருத்தணி, மருதமலை, அழகர்கோவில், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பட மலைக் கோயில்களுக்கு மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்ல கோயில்களுக்கு சொந்தமான பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.

பழனி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், கரூர் ரத்தினகிரீசுவரர் கோயில் உள்ள இழுவை ரயில் மற்றும் கம்பிவட ஊர்தியில் கட்டணமின்றி மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யலாம் என்பன உட்பட அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x