‘வருங்கால முதல்வரே’ - நயினார் நாகேந்திரனை வாழ்த்தும் சுவரொட்டிகளால் சலசலப்பு

திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
திருநெல்வேலியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே’ என்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பது பேசுபொருளாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதை கடந்த சில நாட்களுக்குமுன் மத்திய அமைச்சர் அமித் ஷா அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு அடுத்தநாள் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். நேற்று கட்சி தலைமையகமான கமலாலயத்துக்கு சென்று நயினார் நாகேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில், பாஜகவை சேர்ந்த செட்டிக்குளம் ஊராட்சி தலைவர் அம்மா எஸ்.செல்வகுமார் என்பவர் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று ஒட்டியுள்ள சுவரொட்டியில், நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே’ என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே ‘வருங்கால முதல்வரே’ என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

சட்டப் பேரவை தேர்தலுக்கு அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதால் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற கருத்து பரவிய நிலையில், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா முடிவு செய்வார் என்று நயினார்நாகேந்திரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில்தான் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனை ‘வருங்கால முதல்வரே’என்று வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து இணையதளங்களில் அதிமுக, பாஜக மற்றும் பிறகட்சிகளை சேர்ந்தவர்களும் விமர்சன கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். ‘மாடு ரெண்டு, பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்’ என்று நெட்டிசன்கள் கிண்டலும் செய்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in