Published : 17 Apr 2025 05:45 PM
Last Updated : 17 Apr 2025 05:45 PM
தஞ்சாவூர்: 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் முடிந்த பணிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடியை உடனே மத்திய அரசு விடுவிக்க வேண்டும். இல்லா விட்டால், உயர், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடர விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கிராமப்புற பொருளாதார மேம்பாட்டுக்காக, கிராமங்களில் அனைத்து வகையான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக 100 நாள் வேலை உறுதி சட்டம் 2005ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் தற்போது வரை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாள்தோறும் ரூ.319 கூலியாக வழங்கப்படுகிறது. பணி நாட்களில், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள், தொழிலாளர்களுடன் பணி செய்யும் பகுதியைப் புகைப்படம் எடுத்து, ஆட்சியர், மத்திய, மாநில அரசுகளுக்கு அவ்வப்போது அனுப்பி, வேலைக்கான பணியை உறுதி செய்து வருகின்றனர்.
இதனால், இந்த திட்டத்தின் கீழ் பணிகள் முழுமையாக நடைபெற்று வந்ததுடன், கிராமப் புற தொழிலாளர்கள் வாழ்வாதாரமும் மேம்பட்டு வந்தது. இந்நிலையில், 2024, நவம்பர் மாதம் முதல் இந்த திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.4,034 கோடியை விடுவிக்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்கள், முடிந்த பணிகளுக்கான தொகையைப் பெறாமல் காத்திருக்கின்றனர்.
இதையடுத்து, கணபதியக்ரஹாரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்த திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு, பல மாதங்களாக கூலித் தொகையைப் பெற முடியாததால், தங்களுக்கு கூலித் தொகையை வழங்கக் கோரி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனாலும், இந்த திட்டத்தின் கீழ் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனவே, மத்திய அரசு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய தொகையை உடனடியாக விடுவிக்காவிட்டால், உயர், உச்ச நீதிமன்றங்களில் விரைவில் வழக்குத் தொடரப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளர் சுவாமிமலை சுந்தர.விமலநாதன் கூறியது: தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் 1,02,000 மாற்றுத்திறனாளிகள் உட்பட 92 லட்சம் ஏழை விவசாய கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 80 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் பட்டியலினத் தவர்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு மத்திய அரசு 2024 நவம்பர் மாதம் முதல் இந்தாண்டு மார்ச் வரை 5 மாதங்களாக ரூ.4,034 கோடியை இதுவரை விடுவிக்கா மல் இருப்பது எதேச்சாதிகாரமானது, வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது.
தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டம் 2005ன் படி, பணிகள் முடித்ததில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டப்படியாக தொழிலாளிகளுக்கு கூலித் தொகையை வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 5 மாதங்களாக வழங்காமல் இருப்பது, தொழிலாளர்களை உதாசீனப்படுத்துவதற்கு சமமாகும். வெயிலில் உழைத்தவர்களின் உழைப்பை சிறிது கூட கருத்தில் கொள்ளாமல், மத்திய அரசு, விவசாய தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை கால தாமதத்திற்குரிய வட்டியுடன் சேர்த்து, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது ஏற்புடையதில்லை.
எனவே, தமிழக அரசு. இந்த திட்டத்தின் கீழ் முடிந்த பணிகளுக்கு, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய மொத்தம் ரூ.4,034 கோடியை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் சார்பில் உயர், உச்ச நீதிமன்றங்களில் விரைவில் வழக்குத் தொடரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT