

சென்னை: உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, ட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமி சார்பில் சிறந்த செவிலியர் விருது வழங்கப்படவுள்ளது. 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.
உலக செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே மாதம் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அப்போது, சென்னை ட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் சிறந்த செவிலியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சிறந்த செவிலியர் விருதுக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவரும், ட்வின்டெக் ஹெல்த்கேர் அகாடமி நிர்வாக இயக்குநருமான மருத்துவர் அ.மகாலிங்கம் கூறியதாவது:
உலக செவிலியர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் செவிலியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதுவரை 37 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, நேரடி நோயாளி பராமரிப்பில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். தமிழகத்தில் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் தற்போது பணிபுரிபவராக இருக்க வேண்டும்.
கடைசி நாள் ஏப்.26: இது தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்கு 9710485295 என்ற வாட்ஸ்-அப் எண் அல்லது awards.twintech@gmail.com என்ற இ-மெயிலை தொடர்பு கொள்ளலாம். ஏப்.26-ம் தேதி மாலை 5 மணிவரை வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிபுணர்கள் குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, மதிப்பீடு செய்து 10 முதல் 15 சிறந்த செவிலியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விருது வழங்கும் விழா தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். இந்த அங்கீகாரம் முற்றிலும் தகுதி அடிப்படையிலானது. கட்டணம் அல்லது பதிவுக் கட்டணம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.