அனுமதியின்றி குப்பை எரி உலையை மாநகராட்சி இயக்கியது ஏன்? - பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

அனுமதியின்றி குப்பை எரி உலையை மாநகராட்சி இயக்கியது ஏன்? - பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அனுமதி இன்றி குப்பை எரி உலையை இயக்கியது ஏன்? என சென்னை மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் பதில் அளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் நாளொன்றுக்கு சுமார் 10 டன் திறன் கொண்ட மக்காத குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் எரி உலைகளை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகம் மற்றும் மணலி சின்னமாத்தூர் பகுதிகளில் தனியார் நிறுவனம் மூலம் நிறுவியுள்ளது. இவற்றிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு கடந்த ஏப்.1-ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் சின்னமாத்தூரில் உள்ள குப்பை எரி உலை மாசு கட்டுப்பாடு வாரிய இசைவாணையின்றி செயல்படுகிறது. கடுமையான மாசை ஏற்படுத்தி இருக்கிறது. அங்குள்ள மண்ணை பரிசோதனை செய்ததில் நச்சு உலோகப் படிமங்கள் இருப்பது தெரியவந்தது என தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பான செய்தி நாளிதழ்களில் வெளியானது. அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு, அமர்வின் நீதித்துரை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் துறையே அனுமதி இன்றி குப்பை எரி உலையை இயக்கியது ஏன்? என கேள்வி எழுப்பி, இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஏப்.29-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in