

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவில்பட்டி சங்கரக்குமார் தொடக்கப் பள்ளித் தலைமையா சிரியை விநாயகசு ந்தரி தேர்வு பெற்றுள்ளார்.
ஆண்டு தோறும் செப்டம்பர் 5-ம் தேதி முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் சிறந்த பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் செப்டம்பர் 5-ம் தேதி வழங்குகிறார். இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து 22 ஆசிரியர், ஆசிரியைகள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் கோவில்பட்டி அருகேயுள்ள சங்கரலிங்கபுரம் சங்கரக்குமார் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை விநாயகசுந்தரியும் (54) ஒருவர். அரசு உதவி பெறும் இப்பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக 1986-ல் பணியில் சேர்ந்த விநாயகசுந்தரி, 1995-ம் ஆண்டு முதல் இப்பள்ளியின் தலைமையாசிரியையாக இருந்து வருகிறார். 2011-ம் ஆண்டு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதைப் பெற்றார்.
சக்தி கவசம், நங்கூரப் பூக்கள், ரெட்டியப்பட்டி சண்முகர் பாமாலை, என்றும் மறவா நன்றி பூக்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கவிதை புத்தகங்களை எழுதியுள்ளார். நினைவில் நனையும் மலர்கள் என்ற சிறுகதையையும் எழுதியுள்ளார். அண்மையி்ல் சாய்பாபா பற்றிய பாடல்களை எழுதி, அந்த புத்தகத்தை கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு அளித்தார்.
திருவள்ளுவர் மன்ற புரவலர், கிருஷ்ணகிரி கம்பன் கழக புரவலர் மற்றும் கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் செயலர் ஆகிய பொறுப்புகளை கவனித்து வருகிறார்.
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றது குறித்து, தலைமையாசிரியை விநாயகசுந்தரி கூறுகையில், `விருதுக்கு தேர்வு பெற்றுள்ள செய்தி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஏழை, எளிய மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை வைத்து, அவர்களின் தனித்திறமையை வளர்த்து வருகிறேன். இந்த விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சி’ என்றார்.
அவரை, பள்ளி நிர்வாகக் குழுவினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர், மாணவியர், பெற்றோர் பாராட்டினர்.