காலை உணவு திட்டத்தில் பொங்கல், சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

காலை உணவு திட்டத்தில் பொங்கல், சாம்பார்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் குழந்தைகளுக்கு ஜுன் மாதம் முதல் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு அமைச்சர் பி.கீதா ஜீவன் பதிலளித்து பேசியதாவது: காலை உணவுத் திட்டம் 2022 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 34,987 பள்ளிகளில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜூன் மாதம் முதல் அரிசி உப்புமாவுக்கு பதிலாக மாணவர்களுக்கு பொங்கல் சாம்பார் வழங்கப்படும்.

இதுதவிர வரும் கல்வியாண்டு முதல் நகரப் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்படும். அதேபோல், 2-வது கட்டமாக ஓசூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் புதிய மகளிர் தோழி விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளன. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் ரூ.721 கோடி மாணவிகளின் உயர்கல்விக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் பி.கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள் விவரம்: பள்ளிகளில் செயல்படும் 43,131 சத்துணவு மையங்களில் பயன்பெறும் 42.71 லட்சம் மாணவ, மாணவிகளுக்காக தரப்படும் உணவூட்டு மானியத் தொகை ஆண்டுக்கு ரூ.61.61 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். 25 பேருக்கும் அதிகமாக உள்ள 25,440 சத்துணவு மையங்களுக்கு ரூ.9.6 கோடியில் காஸ் அடுப்புகள் அளிக்கப்படும். மேலும், திருநங்கைகளுக்கு சென்னை, மதுரையில் ரூ.64 லட்சத்தில் அரண் எனும் பெயரில் 2 தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும்.

இதுதவிர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக 20 கருத்தரங்குகள் ரூ.1 கோடியில் நடத்தப்படும். அதனுடன் விழிப்புணர்வு புத்தகங்கள் மற்றும் குறும்படங்கள் ரூ.1 கோடியில் தயாரித்து வெளியிடப்படும். வளர்ச்சி குறைபாடு கொண்ட குழந்தைகளை கண்காணிக்கவும், முன்பருவக் கல்வி மற்றும் கற்றல் திறனை வளர்க்கவும் ரூ.2 கோடியில் செயலிகளை உருவாக்கி, அதற்கான பயிற்சிகளும் வழங்கப்படும்.தவறான பாலூட்டும் முறைகளால் ஏற்படும் குழந்தைகளின் மரணங்களை தவிர்ப்பதற்காக கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கும் பயிற்சி தரப்படும்.

திருநெல்வேலி, திருச்சி உட்பட 5 மாவட்டங்களில் இயங்கும் அரசு கூர்நோக்கு இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ரூ.1.62 கோடியில் அடிப்படை பயிற்சி வழங்கப்படும். சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இயங்கும் சிறப்பு நீதிமன்றங்களில் குழந்தைநேய சூழல் ரூ.50 லட்சத்தில் ஏற்படுத்தப்படும்.

பள்ளி மாணவர்களிடம் நேர்மறையான சூழலை உருவாக்கவும், போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை மீட்டெடுக்கவும் சென்னை டிபிஐ வளாகத்தில் உரிமை முற்றம் அமைக்கப்படும். குழந்தைகளுக்கான பாலியல் குற்ற வழக்குகளில் ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்காக ஒரு மேலாண்மை அலகு ரூ.1.5 கோடியில் உருவாக்கப்படும். இவை உட்பட 22 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in