

தருமபுரி: “தமிழக ஆளுங்கட்சியினர் செய்துள்ள முறைகேடுகள் அனைத்தும் ஓரிரு மாதங்களில் ஒவ்வொன்றாக வெளிவரும்” என பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார். மேலும், “அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார் என்றெல்லாம் திமுகவினர் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர்” என்று அவர் சாடினார்.
தருமபுரியில் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது: “அமலாக்கத் துறை தமிழகத்தின் டாஸ்மாக் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பலரும் விரைவில் அகப்படுவர். ஓரிரு மாதங்களில் தமிழகத்தில் ஆளும்கட்சியினர் செய்துள்ள முறைகேடுகள் ஒவ்வொன்றாக வெளிவரும். டெல்லியில் ஊழல் வழக்கில் முதல்வர் கைதாகி, ஜாமீனில் வெளிவந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது போலவே தமிழகத்திலும் நடக்கும்.
வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்திருக்கிறது. தமிழகத்தில் இருந்து தீய சக்தியான திமுக ஆட்சியை அகற்றும் சிங்கிள் பாயிண்ட் புரோகிராம் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். அதிமுக-பாஜக கூட்டணியில் யாருக்கு எதை தர வேண்டும் என்பதை, கூட்டணியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக முடிவு செய்யும். தமிழகத்தில் போராட்டம், முன்னெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் அதிமுக கூட்டணியின் தலைவர் பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்.
முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மென்மேலும் பல பொறுப்புகளுக்கு செல்ல இருக்கிறார். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், அவர் தனிக்கட்சி தொடங்குகிறார் என்றெல்லாம் சிலர் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணியை சகித்துக் கொள்ள முடியாத திமுகவினர் செய்துவரும் பிரச்சாரம் இது.அமைச்சர் பொன்முடியின் படத்தை பெண்கள் செருப்பால் அடித்தது தவறு.
ஏனெனில் உயிரில்லாத படத்தை செருப்பால் அடிப்பதால் பயன் இல்லை. தமிழக மகளிர் பொன்முடி மீது கோபத்தில் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் இயங்கும் அமைச்சரவையே அந்த நிலையில் தான் உள்ளது. பொன்முடிக்கு கிடைத்து வரும் பெருமை அனைத்தும் ஸ்டாலினையும் சேரும். பொன்முடியை மட்டும் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றக் கூடாது. 2026 தேர்தலில் தமிழகத்தின் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் தூக்கி எறிய வேண்டும். இதற்கான பாடத்தை தேர்தலில் பெண்கள் புகட்டுவார்கள், என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது கட்சி நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.