

கோவை: கோவை மாநகரில் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் ஆகிய இடங்களில் உள்ள நகரப் பேருந்து நிலையங்களிலிருந்து கோவையின் பல்வேறு வழித்தடங்களில் 200-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.
இச்சூழலில், மாநகரில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் அரசு விதி முறைகள் சரிவர பின்பற்றப்படுவதில்லை எனவும், இதனால் அப்பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள், சாலைகளில் செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து சமூக செயல்பாட்டாளரான கோவை நுகர்வோர் மையத்தின் தலைவர் வெங்கடேசன் கூறியதாவது: தனியார் பேருந்துகளில் விதிகளை மீறி ‘ஏர் ஹாரன்’ எனப்படும் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹாரனை அடித்துக் கொண்டு சாலைகளில் அலறியபடி செல்லும் தனியார் பேருந்துகளால், இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.
பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அரசு விதி. ஆனால், தனியார் பேருந்துகளில் நடத்துநர் மட்டுமின்றி அவருக்கு உதவியாக சில நபர்களை பேருந்து நிர்வாகத்தினர் வைத்துக்கொள்கின்றனர். இவர்கள் அந்த பேருந்துகளுக்கு ஆட்களை திரட்டி ஏற்றுவது, படிக்கட்டுகளில் நின்று கொண்டு பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு இடையூறு செய்வது என்பன போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்க வேண்டும்.
முக்கியமாக தனியார் பேருந்துகளில் விதிகளை மீறி ஸ்பீக்கர்கள் அதிக எண்ணிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், சினிமா பாடல்களை அதிக சத்தத்துடன் ஒலிபரப்பியபடி பேருந்துகளை இயக்கு கின்றனர். தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சிலர் சீருடை அணிவது கிடையாது. நடத்துநர்கள் சில பயணிகளிடம் கட்டணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட்டுகளை தருவதில்லை.
சாலைகளில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தனியார் பேருந்துகளை, அதன் ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்கின்றனர். எல்.இ.டி விளக்குகளை பேருந்துகளில் விதிமீறி பொருத்திக் கொள்கின்றனர்.மேற்கண்ட விதிமீறல்களை தடுக்க வட்டாரப் போக்குவரத்து துறையினர், மாநகர போக்குவரத்து காவல்துறையினர் அடிக்கடி தனியார் பேருந்துகளில் தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.