Last Updated : 16 Apr, 2025 03:27 PM

 

Published : 16 Apr 2025 03:27 PM
Last Updated : 16 Apr 2025 03:27 PM

சென்னை மெட்ரோ ரயில்களில் அதிகரிக்கும் பயணிகள் - பெட்டிகள் எண்ணிக்கை, இணைப்பு வாகன வசதி கூடுமா?

மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கும் நிலையில், அதற்கு ஏற்ப பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது, இந்த வழித்தடங்களில் தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.

பயணிகளுக்கு விரைவான, நம்பகத்தன்மையான மற்றும் பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வருகிறது. இதன்காரணமாக, மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. நடப்பாண்டில் கடந்த மார்ச்சில் மட்டும் 92.10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப, கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றும், இணைப்பு வாகன வசதியை அதிகரிக்கவும் பயணிகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் பயணிகள் கூறியதாவது: அலுவலக நேரங்களில், மெட்ரோ ரயில்களில் நிற்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, அடிக்கடி மின்சார ரயில் சேவையில் பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் ஆகியவை காரணமாக பயணிகள் கூட்டம் அதிகமாகி உள்ளது. எனவே, கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும்.

மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து தேவையான இடங்களுக்கு செல்ல போதிய இணைப்பு வாகன வசதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், சில மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய இணைப்பு வாகன வசதி இல்லாததால், ஆட்டோ, காரில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டியுள்ளது. எனவே, இதற்கும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வரும் ஆண்டுகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், 6 பெட்டிகள் அல்லது கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 28 மெட்ரோ ரயில்களை வாங்க கடன் வசதிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை தயாரித்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

இதுதவிர, மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, முழுமையாக இணைப்பு வாகன வசதியை ஏற்படுத்த அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 22 சிற்றுந்துகள் தற்போது 11 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. திருமங்கலம் மற்றும் ஆலந்தூரில் இருந்து அம்பத்தூர் மற்றும் போரூரில் உள்ள சில ஐடி நிறுவனங்களை இணைக்கும் 2 டெம்போ டிராவலர்ஸ் இயக்கப்படுகின்றன. இதுதவிர, பல நிலையங்களில் இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x