Published : 15 Apr 2025 07:15 PM
Last Updated : 15 Apr 2025 07:15 PM

‘பென்சில்’ பிரச்சினையில் சக மாணவருக்கு அரிவாள் வெட்டு - நெல்லை துணை ஆணையர் விளக்கம்

திருநெல்வேலியில் அரிவாள் வெட்டு சம்பவம் நடந்த தனியார் பள்ளியின் வெளியே கூடியிருந்த பெற்றோர்கள்

திருநெல்வேலி: “பென்சில் தொடர்பாக இரு மாணவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையே, அரிவாள் வெட்டு சம்பவத்துக்கு காரணம்,” என்று நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் விளக்கம் அளித்துள்ளார்.

பாளையங்கோட்டை தனியார் பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் அரிவாளால் வெட்டினார். இதைத் தடுத்த ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த, நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் கூறியதவாது: “பென்சில் தொடர்பாக இரு மாணவர்களிடம் ஏற்பட்ட பிரச்சினையே இதற்குக் காரணம். காயமடைந்த மாணவர் மற்றும் ஆசிரியைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரிவாளால் வெட்டிய மாணவரிடம், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மாணவருக்கு கவுன்சிலிங் கொடுக்க உள்ளோம். அவரும் ஒரு குழந்தைதானே” என்றார். இந்நிலையில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி சிவக்குமார் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாலை விசாரணை மேற்கொண்டார்.

நடந்தது என்ன? - திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இன்று (ஏப்.15) வழக்கம்போல் பள்ளி வகுப்புகள் நடைபெற்று வந்தது. அப்பள்ளியின் 8-ம் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு மாணவர் திடீரென தனது புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, அருகிலிருந்த சக மாணவரை வெட்டியுள்ளார்.

இதைக்கண்ட பிற மாணவர்கள் சத்தம்போட ஆசிரியை ஓடி வந்து தடுத்துள்ளார். அப்போது, அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து, தலை, கழுத்து, கையில் வெட்டுப்பட்ட மாணவரும், காயமடைந்த ஆசிரியையும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து வந்த பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் போலீஸார் பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பென்சில் கொடுப்பது தொடர்பாக இரு மாணவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, சக மாணவரை அரிவாளால் வெட்டியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, அரிவாளால் வெட்டிய மாணவரை போலீஸார் பிடித்து, குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அந்த மாணவரிடமும், வகுப்பறையில் இருந்த மாணவ, மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்த தகவல் பரவியதால், பெற்றோர் திரண்டனர். பள்ளி வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x