

தமிழகத்தில் எப்போதும் பாஜக காலூன்ற முடியாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அம்பேத்கர் பிறந்த நாளில் சமத்துவ நாள் உறுதி மொழியை ஏற்று இருக்கிறோம்.
ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை படைக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாஜகவால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்துத்துவ கருமேகங்கள் தமிழ்நாட்டை சூழ வந்திருக்கிறது. அதை ஒழிக்க அம்பேத்கர் பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.
தமிழகத்தை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் யாரும் சீர்குலைக்க அனுமதிக்க கூடாது. அதற்காக இன்றும் மக்களவையில் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை ராகுல் காந்தி காண்பிக்கும்போது பாஜகவினர் மிரண்டு போகின்றனர். பாஜகவின் உண்மையான முகத்தை தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளனர். தமிழகத்தில் எப்போதும் பாஜக காலூன்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.