

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்டல தலைமையகங்களில் ஏப்.21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்துக் கழகங்கங்களில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்து தொழிற்சங்க கூட்டம் ஏஐடியுசி மாநிலக்குழு அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ஓய்வுபெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு சம்பந்தமான வழக்கில், தொடர்ந்து காரணங்களைக் கூறி, நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
ஓய்வுபெற்ற ஊழியர்களின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு விரைவில் முடிவு காண வேண்டும் என வலியுறுத்தி, ஏப்.21-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றம் முன்பு கவன ஈர்ப்பு அணிவகுப்பு நடத்துவது என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை தவறான அடிப்படையில் புரிந்துகொண்டு பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக எதிர் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
மேலும், கோவை சங்கம் கூட்டமைப்பு தலைவர்களிடம் இயக்கத்தை நடத்துவது சம்பந்தமாக பரிசீலிக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். நமது நோக்கம் தொழிலாளர்களின் பாதிப்புகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதுதான். எனவே, நீதிமன்ற அணிவகுப்பு இயக்கத்துக்குப் பதிலாக, ஏப்.21-ல் அனைத்து மண்டலங்களிலும் ஆர்ப்பாட்ட கேட் கூட்டங்களை நடத்த வேண்டும்.
ஊதிய ஒப்பந்தம் தொடர்ந்து தாமாதமாகி வருகிறது. அரசு உடனடியாக பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்றவுடன் பணப்பலன், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும். 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
அதேபோல், வாரிசு வேலை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஒப்பந்த முறை, தனியார்மய நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்.21-ம் தேதி மண்டல தலைமையகங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.