Published : 15 Apr 2025 05:35 AM
Last Updated : 15 Apr 2025 05:35 AM
சென்னை: சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் 481 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.44.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் தங்கி கல்வி பயில ஏதுவாக, சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி கடந்த 1961-ம் ஆண்டில் திறக்கப்பட்டது. இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர்.
இந்த வளாகத்தில் 1.01 லட்சம் சதுரஅடி பரப்பளவில் 10 தளங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் மாணவர் விடுதி கட்டிடம் கட்டப்படும் என்று கடந்த 2022-23-ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் புதிய மாணவர் விடுதி கட்டிடம் கட்ட, முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 ஜூலை 12-ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.
இந்த நிலையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மார்ச் 29-ம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ‘‘எம்.சி.ராஜா விடுதி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட விடுதி கட்டிடம் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி திறக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
அதன்படி, இந்த கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், எம்.பி.க்கள் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலர் ஜெ.ஜெயகாந்தன், ஆதிதிராவிடர் நலத் துறை செயலர் க.லட்சுமி பிரியா, தாட்கோ மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் திறந்து வைத்துள்ள கட்டிடம் 481 மாணவர்கள் தங்கும் வசதியுடன் 121 அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில் சமையல் அறை, உணவருந்தும் கூடம், கண்காணிப்பாளர் அறை, பராமரிப்பாளர் அறை, ஓய்வறை, 4 மாணவர்கள் தங்கும் வகையிலான அறைகளும், முதல் தளத்தில் நூலக அறை, பன்னோக்கு கூடம், 9 மாணவர்கள் தங்கும் வகையிலான அறைகளும் உள்ளன. 2 முதல் 10-வது தளம் வரை அனைத்து தளங்களிலும் நூலக அறை, 12 மாணவர்கள் தங்கும் வகையிலான அறைகள் உள்ளன. மேல்தளத்தில் 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 நீர்தேக்க தொட்டிகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT