“ராமதாஸை வசைபாடும் திலகபாமா கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்” - பாமக பொதுச் செயலாளர்

வடிவேல் ராவணன் மற்றும் திலகபாமா | கோப்புப்படம்
வடிவேல் ராவணன் மற்றும் திலகபாமா | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: “நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸ் குறித்து வசை பாடி இருக்கும் பொருளாளராக இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது.,” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பாமகவின் அண்மை நிகழ்வுகள் பற்றிக் கட்சியின் பொருளாளராக இருக்கும் திலகபாமா என்பவர் கூறுகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் எல்லா நிலைகளிலும் சரியான முடிவெடுத்துச் சரியான செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவார். இப்போது தவறான முடிவெடுத்து இருக்கிறார். இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்று சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத் தனமாக அவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பாமகவின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர். திலகபாமா பாமக தோழர் அல்லர். மேட்டுக்குடியினம். பெண்களுக்குத் தலைமையில், அதுவும் பொருளாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று ராமதாஸின் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர். பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர். உடனிருந்தே கொள்ளும் நோய் இவர்.

அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு அவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பாமகவை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி. தமிழகத்திலேயே ஏன், இந்தியாவிலேயே ஜனநாயகப் பண்புள்ள ஒரே கட்சி பாமக ஜனநாயக மரபுகளையும், சமூக நீதிக் கோட்பாட்டினையும் கட்சிக்குள்ளே பேணிக் காத்து வரும் ஒரே தலைவர் வழிகாட்டி ராமதாஸ். அரசியல் கட்சிகள் கடந்து அனைவராலும் பாராட்டப்பெறும் ஒரே தலைவர். அவர் விடுக்கும் அறிக்கைகளே அனைவருக்கும் அரசியல் அகரமுதலி.

அவரை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று நெஞ்சிலே வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். பல்வேறு மாநில பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி வந்த, நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன். நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸ் குறித்து வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது.

திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்களே தைலாபுரத்திலிருந்து எப்போது தைலம் வரும் என்று காத்திருக்கையில், நேற்று முளைத்த காளான்கள் அவரை வசை பாடுவது தான் பேரவலம். மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசுகள் எதுவாயினும், கூட்டணி கட்சியே என்றாலும் ஆட்சியாளரின் தவறான போக்குகளையும், ஆட்சியின் குறைபாடுகளையும் இடித்துரைக்கும் ராமதாஸை, நேற்றுக் கட்சிக்குள் வந்த திலகபாமா வசைபாடி மகிழ்வதை விடுத்து, தான் கூறியவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே கட்சியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in