Published : 13 Apr 2025 12:43 AM
Last Updated : 13 Apr 2025 12:43 AM

அதிமுக- பாஜக கூட்டணி என்பது தோல்வி கூட்டணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அதிமுகவினர் மீதான இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தை அடமானம் வைக்க துடிப்பதாகவும், இந்த கூட்டணியை உறுதி செய்ததே ஊழல்தான் என்றும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் சென்னையில் பாஜக- அதிமுக கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அதிமுக- பாஜக கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி. தொடர் தோல்வியை அந்த அணிக்கு தமிழக மக்கள் கொடுத்தனர். இதே தோல்விக் கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. சென்னையில் அமித் ஷா அளித்த பேட்டி, அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதாக இல்லை. அதிமுக- பாஜக கூட்டணியை உறுதி செய்து கொள்வது அவரது விருப்பம் சார்ந்தது. ஆனால் எதற்காக இந்தக் கூட்டணியை உருவாக்கினார்கள், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளார்கள் என்று சொல்லவில்லை. மாறாக, குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கப் போவதாக கூறியுள்ளார்.

நீட் தேர்வு, இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, வக்பு சட்டத்தை எதிர்ப்பதாக அதிமுக சொல்கிறது. தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கான இடம் குறையக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது. இவை எல்லாம் இவர்களது குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இருக்கிறதா. மாநில உரிமை, மொழியுரிமை - தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றுக்கு எதிராக இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பதவி மோகத்தில், தமிழகத்தின் சுயமரியாதையை, தமிழகத்தின் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழகத்தை பாழாக்கியவர்தான் பழனிசாமி. நீட் தேர்வு குறித்த கேள்விகளுக்கு, அமித் ஷா சரியான பதிலை சொல்லாமல் திசை திருப்பியுள்ளார். உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்துள்ள ஓர் அமைச்சர், 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு' என்று பேசி இருப்பது கண்டனத்துக்கு உரியது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முடியாதவர், அமைதியான மாநிலத்துக்குள் வந்து அமைதியைக் குலைக்கப் பார்க்கிறார். அனைத்து வகையிலும் தமிழகம் முன்னேறி வருவதை மத்திய அரசின் புள்ளி விவரங்களே ஒப்புக் கொள்கின்றன. ஆனால், சட்டம் ஒழுங்கு மோசம் என்று பொறுப்பற்ற வகையில் பீதியைக் கிளப்புகிறார்.

ஊழலுக்காக இரு முறை முதல்வர் பதவியைவிட்டு விலக வைக்கப்பட்டவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர். அவரது கட்சியுடன் கூட்டணி வைக்கும் அமித் ஷா ஊழல் குறித்து பேசலாமா.

இன்றைய அதிமுக பொறுப்பாளர்கள் உறவினர் குடும்பங்களில் மத்திய புலனாய்வு அமைப்புகள் இரண்டு ரெய்டுகள் நடத்தியதையும், அதில் இருந்து தப்பிக்க பாஜகவை நோக்கி அவர்கள் ஓடி வந்ததையும், அதையே நிபந்தனையாக வைத்து கூட்டணியை உறுதி செய்ததையும் தமிழக மக்கள் அறிவர். அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்ததே 'ஊழல்' தான் என்பதையும் மக்கள் அறிவார்கள்.

இரண்டு ரெய்டுகள் நடந்தவுடன் அதிமுகவை அடமானம் வைத்திருப்பவர்கள், அடுத்து தமிழகத்தை அடமானம் வைக்கத் துடிக்கின்றனர். தமிழை ஒழிக்க இந்தி, தமிழர்களது வளர்ச்சியைத் தடுக்க பல சதித் திட்டங்கள், தமிழக உரிமையைப் பறிக்க தொகுதி மறுவரையறை எனத் திட்டமிட்டு தமிழகத்தை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பாஜக தலைமை. அதிமுக தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது.

பாஜக தனியாக வந்தாலும், எவர் துணையோடு வந்தாலும் தமிழக மக்கள் தக்கப்பாடம் புகட்டக் காத்திருக்கின்றனர். சுயமரியாதையின்றி டெல்லிக்கு மண்டியிட்டு தமிழகத்தை அடகு வைக்கும் துரோகக் கூட்டத்துக்கு தமிழக மக்கள் தக்க விடையளிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x