சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பிரேமலதா அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பிரேமலதா அறிவிப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த முறை நன்கு யோசித்து நிதானமாக முடிவு எடுப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

இதுதொடர்பாக அவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட தகவலை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன். அது அந்த 2 கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு. அதுபற்றி நாங்கள் எந்த கருத்தும் கூறமுடியாது. தேமுதிகவை பொறுத்தவரை ஏப்ரல் 30-ம் தேதி செயற்குழு-பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (நேற்று) நடைபெற்றது. அதற்காகவே நிர்வாகிகள் அலுவலகம் வந்துள்ளனர்.

தேமுதிகவின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பணிகளில் மட்டுமே நாங்கள் முழு, மூச்சாக ஈடுபட்டு வருகிறோம். செயற்குழு-பொதுக்குழு நடந்து முடிந்தவுடன் யாருக்கு எல்லாம் பதவிகள் என்று அறிவிக்கப்படும். 6 மாதம் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மட்டுமே மேற்கொள்ள உள்ளோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. அதனால் நாங்கள் இந்த முறை கூட்டணி விவகாரத்தில் மிகவும் யோசித்து, நிதானமாகதான் முடிவு எடுப்போம்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருந்தோம். கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை, அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். பாஜக மாநில தலைவர் மாற்றம் என்பது அந்த கட்சியின் முடிவு. அதில் எங்களின் கருத்து எதுவும் இல்லை. புதிய தலைவருக்கு தேமுதிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், பெண்களை பற்றி பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி தவறாக சித்தரித்து பேசியதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in