

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய வட்டங்களில் நேற்று முன்தினம் மழையுடன் வீசிய பலத்த காற்றில், தார்களுடன் முறிந்து சேதமடைந்த வாழை மரங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
திருவிடைமருதூர் வட்டத்துக்கு உட்பட்ட கதிராமங்கலம், தியாகராஜபுரம், நரசிங்கன்பேட்டை, ஆடுதுறை, கோவிந்தபுரம், கஞ்சனூர் உட்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் 500 ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, செவ்வாழை கன்றுகளை விவசாயிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் பதியமிட்டனர்.
ஓராண்டு பயிரான இவை தற்போது காய்கள் விட்டு, வாழைப்பூவுடன் இன்னும் 2 மாதங்களில் அறுவடை செய்யும் பருவத்தில் இருந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இக்கிராமங்களில் மழையுடன் பலத்த காற்று வீசியதில் 5,000-க்கும் அதிகமான வாழை மரங்கள், தார்களுடன் முறிந்து சேதமடைந்துள்ளன. இதனால், பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதேபோல, பாபநாசம் வட்டத்துக்கு உட்பட்ட இளங்கார்குடி, உள்ளிக்கடை உள்ளிட்ட 5-க்கும் அதிகமான கிராமங்களிலும் 2,500 வாழை மரங்கள் தார்களுடன் முறிந்து சேதமடைந்துள்ளன. எனவே, காற்றில் முறிந்து விழுந்த வாழை மரங்களுக்கு, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து வாழை விவசாயி கதிராமங்கலம் கங்காதரன் கூறியது: ஏக்கருக்கு 1,000 வாழை மரக்கன்றுகளை பதியமிட்டு, அவற்றுக்கு உரமிடுதல், களை அகற்றுதல், சவுக்கு மரத்தால் முட்டுக் கொடுத்தல், தொழிலாளர்களுக்கு கூலி என ரூ.2 லட்சம் வரை செலவாகியுள்ளது. எவ்வித சேதமும் ஏற்படாமல் அறுவசை செய்தால் ரூ.3 லட்சம் கிடைக்கும். இதில், செலவு போக விவசாயிகளுக்கு சிறிய லாபம் கிடைக்கும்.
ஆனால், கதிராமங்கலம் உட்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் நேற்று முன்தினம் மழையுடன் வீசிய பலத்த காற்றில் 5,000-க்கும் அதிகமான வாழை மரங்கள் தார்களுடன் முறிந்துவிட்டன. இதனால், வாழை விவசாயிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தகவலின்பேரில் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் வந்து சேதங்களைப் பார்வையிட்டுச் சென்றனர். ஆட்சியரின் கவனத்துக்கும் நாங்கள் கொண்டு சென்றுள்ளோம். விவசாயிகள் பெரும்பாலானோர் வட்டிக்கு வாங்கித்தான் முதலீடு செய்துள்ளனர். எனவே, தற்போது வாழை மரங்கள் முறிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் சேதங்களை முறையாக கணக்கிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் கூறியது: கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டாரங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சேதமடைந்த வாழைகள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து விரைவில் அறிக்கை தயார் செய்து ஆட்சியரிடம் வழங்க உள்ளோம் என்றனர்.