அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: ஜி.கே.வாசன் கருத்து

அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: ஜி.கே.வாசன் கருத்து
Updated on
1 min read

அதிமுக-பாஜக கட்சிகளுக்கிடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக தமாக தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

மதுரையில் நேற்று நடைபெற்ற தமாகா நிர்வாகிகளஅ ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் பொன்முடி பொறுப்பற்ற முறையிலும், கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க வகையிலும் பொதுமேடையில் பேசியிருப்பது தமிழகத்துக்கு அவமானம். அவரை கட்சிப் பதவியிலிருந்து நீக்கினால் மட்டும் போதாது, அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும். அப்படி நீக்கவில்லை என்றால் திமுக அரசும், கட்சித் தலைவரும் அவரை ஆதரிப்பதாகத்தான் அர்த்தம்.

மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி உருவாகியுள்ளது. தேசிய அளவில் என்டிஏ வலுவாகத் தொடங்கியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச் செயலாளரை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு, திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சியினருக்கும் தோல்வி பயம் ஏற்படத் தொடங்கியிருக்கிறது. இதனால் கண்மூடித்தனமாக பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

அதிமுக-பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி. ஏற்கெனவே வென்ற கூட்டணி. மீண்டும் தமிழகத்தின் அவசியத் தேவைக்காக, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், திமுக அரசை அகற்றும் வகையிலும் இக்கூட்டணி உருவெடுத்துள்ளது. இதில் தமாகா முக்கியக் கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டின் நலன் கருதி மேலும் பல கட்சிகளும் இக்கூட்டணிக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வக்பு வாரிய சட்டத் திருத்தம் மூலம் ஏழை, நடுத்தர முஸ்லிம்கள் பயனடைவர். அந்த மசோதாவைப் படித்துப் பார்த்து, லட்சக்கணக்கான மக்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நான் ஆதரவாக வாக்களித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in