அமைச்சரின் ஆபாச பேச்சால் கலாச்சார படுகொலைகள் அரங்கேறி வருகின்றன: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

அமைச்சரின் ஆபாச பேச்சால் கலாச்சார படுகொலைகள் அரங்கேறி வருகின்றன: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை
Updated on
1 min read

அமைச்சரின் ஆபாசப் பேச்சு மூலம், தமிழகத்தில் கலாச்சாரப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

மதுரை திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் ‘கம்பர் 2025 - கல்விக்கூடங்களில் கம்பர்’ எனும் மாநில அளவிலான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரித் தலைவர் க.ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். எம்ஜிஆர் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் வரவேற்றார். விஐடி பல்கலை. இணைவேந்தர் செல்வம் முன்னிலை வகித்தார். போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

கம்ப ராமாயணம் தமிழர்களின் அடையாளம். தமிழ்க் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் காவியம். குறிப்பாக, பெண்களின் கண்ணியத்தைப் போற்றுகிறது. ஆனால், சில தினங்களுக்கு முன்பு ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பெண்களை தரக்குறைவாகவும், கீழ்த்தரமாகவும் விமர்சித்தார். அமைச்சரின் பேச்சு கண்டனத்துக்குரியது. அப்படிப்பட்டவரை நான் கனவான் எனக் கூப்பிடும் கட்டாயத்தில் உள்ளேன். சிவன்-விஷ்ணுவை வழிபடுவோரையும், அவர்களது பக்தி, உணர்வுகளையும் காலில் போட்டு மிதித்துள்ளார். பல்லாயிரம் ஆண்டு தெய்வ மரபுகளை சேதப்படுத்தியுள்ளனர். அமைச்சரின் ஆபாசப் பேச்சு மூலம் தமிழகத்தில் கலாச்சாரப் படுகொலைகள் அரங்கேறி வருகின்றன.

அந்த அமைப்பினரால் தெய்வங்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுக்கு இணையாக ஒப்பிடுவது போன்ற செயல்கள் நடந்து வருகின்றன. தற்போது புதிய அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகளும் நடைபெற்று வருகி்ன்றன. இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று இருக்கக் கூடாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழிபாட்டுத்தலங்கள், ஆலயங்கள், விழுமியங்களை அழிக்க முனைந்தபோது, மக்கள் எதிர்த்துப் போராடினார்கள். இதை நம் முன்னோரிடமிருந்து நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். பள்ளிகளில் இருந்தே இதை தொடங்க வேண்டும். இதை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதுவே, கம்பனுக்கு நாம் செலுத்தும் பெரிய அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். சாஸ்த்ரா பல்கலை. துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in