

மதுரை: “தமிழகத்தின் கலாச்சார, விழுமியங்களை அவமதிப்பு செய்கின்றனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவிவரும் தமிழ்க் கலாச்சார அடையாளத்தை அழித்தொழிக்கின்றனர். பெண்களையும், சைவ, வைணவ மதத்தையும், சிவனையும் விஷ்ணுவையும் வழிபடும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதன் மூலம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் ‘கம்பர் 2025 - கல்விக்கூடங்களில் கம்பர்’ எனும் மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளின் நிறைவு பரிசளிப்பு விழா இன்று (ஏப்.12) நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “நேற்று பங்குனி உத்திரம், இன்று பங்குனி அஸ்தம் என மங்கலகரமான நன்நாட்கள் ஆகும். ராமனும் சீதையும் மணந்தது நேற்று, ராமனின் மிகப்பெரிய பக்தனான அனுமன் பிறந்த தினம் இன்று. மேலும் கம்பன் தனது ராமாயணத்தை உலகிற்கு அளித்த நாள் இன்று.
பிஹாரில் உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது எனது சிறு வயதில் கம்ப ராமாயணத்தை இயற்றிய கம்பர் பிறந்த இடத்தையும், அவர் ராமாயணத்தை அரங்கேற்றிய இடத்தையும், அவர் மறைந்த இடத்தையும் பார்க்க வேண்டும் என கனவு கண்டேன். அந்த கனவு இன்று நிறைவேறியிருக்கிறது. கம்பன் பிறந்த இடமான திருவழுந்தூர் கம்பன் மேட்டுக்கு மார்ச் 31-ம் தேதி செல்லும் பாக்கியம் கிடைத்தது. ராமநவமி புனிதத் திருநாளன்று தரிசித்தேன். அதேபோல், நாட்டரசன்கோட்டையில் கம்பர் சமாதி அடைந்த இடத்தில் தரிசனம் செய்யும் பெரும் பாக்கியம் நேற்று கிடைத்தது.
கம்பராமாயணம் என்பது தமிழர்களின் அடையாளம், தமிழ்க் கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. ராமாயணத்தில் வரும் ராமாகாதை என்பது மகாகாவியம் மட்டுல்ல. தமிழ்க் காலாச்சாரத்திற்கு வடிவம் கொடுக்கிறது. உரு கொடுக்கிறது. ஆணிவேராகவும் ஆன்மிகமாகவும் விளங்குகிறது. கலாச்சாரம் என்று சொன்னால் மக்கள் பேசும் மொழி, இலக்கியங்கள்தான். அதன் மொத்த உருவம்தான். கலாச்சாரம். அறிவுசார் பரிணாமவளர்ச்சியை இலக்கியங்கள் குறிக்கின்றன.
இசை ஆன்மாவோடு தொடர்புடையது. இவை அனைத்தும் குறிப்பிட்ட மக்களின் பிரதிபலிப்பாகவும் திகழ்கிறது. இசை என்பது ஆன்மாவோடு கலந்திருப்பது. இவை அனைத்தும்தான் தமிழர்களின் கலாச்சாரமாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ராமாயணம் வடமாநிலங்களில் பட்டிதொட்டியெங்கும் பரவிக்கிடக்கிறது.ஆனால் துளசிதாசரைவிட புலமைமிக்க கம்பராமாயணம் தமிழகத்தில் எங்கும் காணப்படவில்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. மேலும் தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கம்பருக்கு ஏதாவது இருக்கை இருக்கிறதா எனத் தேடியபோதும் கிடைக்கவில்லை.
இது எனக்கு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. கம்பராமாயணம் தமிழர்களின் நன்மதிப்புகளை விழுமியங்களை சமுதாயப்போக்கை எடுத்துக் காட்டுகிறது. ஒரு தனிமனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. குறிப்பாக பெண்களின் கண்ணியம் போற்றப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் போற்றப்படுவதைவிட நமது கம்பனோ, ராமாயணத்தில் பெண்களின் மாட்சியையும், தமிழ்ப் பெண்களுக்கு கவுரவம் கொடுத்தும் விவரித்துள்ளார். இது கம்பன் பெண்களை போற்றும் கலாச்சாரத்தை நமக்கு அளித்துள்ளார்.
ஆனால், சில தினங்களுக்குமுன் ஆளுங்கட்சியைச சேர்ந்த ஒருநபர் பெண்களை எவ்வளது தரக்குறைவாக பேசமுடியுமோ அந்தளவுக்கு கீழ்த்தரமாக விவரித்திருந்தார். ராவணன் தூக்கிச் சென்றக் காட்சியை கூட கம்பன் கண்ணியமாக கூறியிருந்தார். ஆனால் அந்த அமைச்சரின் பேச்சுகள் கண்டனத்திற்குரியது. அவரத பேச்சுகளில் விமர்சனங்களை பார்க்கின்றோம். இதில் இருக்கும் ஆபத்துகளை நாம் உணர வேண்டும். இதன் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தின் நன்மதிப்புகள், கண்ணியமான பாதையை, நாம் அழித்து வருகிறோம், மறந்து வருகிறோம். இதை நினைவூட்டுகின்றேன். அப்படிப்பட்ட நபரை நான் கனவான் என கூப்பிடும் கட்டாயத்தில் உளளேன்.
ஆழ்வார்கள், நாயன்மார்களில் பெண்களும் உள்ளனர்.அப்படிப் பேசியவர் பெண்களை மட்டும் அவமதிக்கவில்லை, பெண்களின் கண்ணியத்திற்கு மட்டும் சேதம் விளைவிக்கவில்லை. சிவன் விஷ்ணுவை வழிபடுவோரையும் அவர்களது பக்தியையும், அவர்களது உள்ளத்தின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துள்ளார். பல்லாயிரம் ஆண்டு தெய்வ மரபுகளை சேதப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் பக்தி மணம் கமழாத இடமே இல்லை. அத்தகைய தமிழக மண்ணில் தெய்வ வழிபாட்டாளர்களை புண்படுத்தியிருக்கும் செயலை அரங்கேறியிருக்கின்றனர்.
அப்படிப் பேசியவர் தனி நபர் அல்ல, தமிழகத்தில் சுமார் 75 ஆண்டுகளாக நிலவிவரும் சூழல் அமைப்பில் அவர் ஒரு சிறுபுள்ளிதான். அவர் மூலம் தமிழகத்தில் அரசியல் ரீதியாக கலாச்சார படுகொலைகள் அரங்கேறியிருக்கிறது. அந்த அமைப்பினரால் தெய்வங்களுக்கு செருப்பு மாலை அணிவிப்பது, சனாதன தர்மத்தை டெங்கு மலேரியாவுக்கு இணையாக ஒப்பீடு செய்வது போன்ற செயல்கள் நடந்துவருகின்றன.
இந்த சூழல் அமைப்பினரின் ஒருபகுதிதான் இச்செயல். தமிழகத்தில் நிலவிவரும் கலாச்சாரம், விழுமியங்களை அவமதிப்பு செய்கின்றனர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவிவரும் தமிழ்க் கலாச்சாரம் அடையாளத்தை அழித்தொழிக்கின்றனர். பெண்களையும், சைவ, வைணவ மதத்தையும், சிவனையும் விஷ்ணுவையும் வழிபடும் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதன் மூலம் புதிய அடையாளத்தை ஏற்படுத்தக்கூடிய முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
நாம் என்ன செய்யு முடியும். நம்மால் என்ன செய்ய முடியும் என்றிருக்கக்கூடாது. நமது முன்னோர்கள் அதற்கு சான்றாக விளங்குகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியாளர்கள் அடக்குமுறை அராஜகத்தில் ஈடுபடும்போது மக்கள் சமுதாயம் விழித்து செயல்பட்டதுபோல் விழிப்போடு செயல்பட வேண்டும். வழிபாட்டுதலங்கள், ஆலயங்கள், விழுமியங்களை அழிக்க முனைந்தபோது ஆட்சியாளர்கள் எதிர்த்துக் கேட்கத் தவறியபோது மக்கள் எதிர்த்து போராடினார்கள்.
அதைப்போலவே தமிழர்களின் அடையாளங்கள், கலாச்சாரத்திற்கு தற்போது சிதைவு நடக்கும்போது எதிர்க்கும் பொறுப்பை முன்னோர்ர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு பள்ளிகளில் இருந்து பொறுப்பை தொடங்க வேண்டும். பள்ளிகளில் கம்பரை பற்றிய குழுக்கள் ஏற்படுத்த வேண்டும், கம்பனையும், கம்பராமாயணத்தையும் கற்பிக்கலாம். விவாதிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் அரங்கேற்றலாம்.
தமிழர் மரபு, பாரம்பரியம், கலாச்சாரம், நன்மதிப்புகளை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்கு கம்ப ராமாயணத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்களின் சமூக பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு என்பது ஏதோ ஒரு மாநிலமல்ல, பாரத தேசத்தின் பெருமிதம். உலகில் எங்கு சென்றாலும் பிரதமர் மோடி தமிழ்க் கலாச்சாரத்தை உலகெங்கும் பரப்பி வருகிறார். அத்தகைய தமழ் கலாச்சாரத்தை காக்கும் வகையில் கடமை உணர்ச்சியுடன் செயலாற்ற வேண்டும் என்பது எனது பேரவா.
இத்தகைய விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டதை பார்க்கும்போது கம்பனும், ராமனும் மடிந்துவிடவில்லை என்னும் நம்பிக்கை பிறக்கிறது. இதை ஒரு இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதோடு நின்றுவிடாமல் ஆண்டுதோறும் தொடர் சங்கிலியாக நடத்த வேண்டும். இதுவே கம்பனுக்கு நாம் செலுத்தும் மிகப்பெரும் அஞ்சலியாக இருக்கும், என்று அவர் பேசினார்.
தியாகராஜர் பொறியியல் கல்லூரி தலைவர் க.ஹரி தியாகராஜன் தலைமை வகித்தார். எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் வரவேற்றார். விஐடி பல்லைக்கழக இணைவேந்தர் செல்வம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி முடிவில் சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம் நன்றி கூறினார்.